இலங்கை காப்புறுதி நிறுவன சட்டமூலத்தை தயாரிக்குமாறு சட்ட வரைஞருக்கு ஆலோசனை வழங்குவதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
இதற்கான யோசனையை நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சராக ஜனாதிபதி அநுரகுமார சமர்ப்பித்திருந்தார்.
நேற்று நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் இந்த முடிவு எட்டப்பட்டுள்ளது.
காப்புறுதித் துறையின் அறிவு விருத்தி மற்றும் மேம்பாட்டை மையமாகக் கொண்டு 1982ஆம் ஆண்டு இலங்கை காப்புறுதி நிறுவனம் நிறுவப்பட்டது.
காப்புறுதி தொடர்பான கல்வி நிகழ்ச்சிகள், பயிற்சி நடவடிக்கைகள் மற்றும் தொழில்வாண்மை பரீட்சைகளை நடத்தும் இலங்கையின் ஒரேயொரு தொழில்வாண்மை நிறுவனமாக இது செயல்பட்டு வருகிறது.
2000ஆம் ஆண்டின் 43ஆம் இலக்க காப்புறுதி தொழிற்துறையை முறைமைப்படுத்தும் சட்டத்தின் கீழ், உரிமம் பெற்ற காப்புறுதி முகவர்களாக தகுதி பெறுவதற்காக, இலங்கை காப்புறுதி ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழுவின் சார்பில் இலங்கை காப்புறுதி நிறுவனத்தால் நடத்தப்படும் பரீட்சைகளில் சித்தியடைவது கட்டாயமாகும்.
இலங்கை காப்புறுதி நிறுவனம் தனது பணிகளை முறையாக நிறைவேற்ற தேவையான அதிகாரங்களை வழங்கவும், நிதி ரீதியாக நிலைத்த நிறுவனமாக இயங்கவும் வாய்ப்பு அளிக்கும் வகையில், அதனை கூட்டிணைப்பதற்கான அடிப்படைச் சட்டமூலம் 2018 மற்றும் 2019 ஆண்டுகளில் நிதி விடயதான அமைச்சினால் தயாரிக்கப்பட்டிருந்தது.
இந்த அடிப்படைச் சட்டமூலத்திற்கு சமகால இலங்கை காப்புறுதி ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழுவின் ஒப்புதலும் கிடைத்துள்ளது.
இந்த பின்னணியில், மேற்குறித்த அடிப்படைச் சட்டமூலத்தின் அடிப்படையில் இலங்கை காப்புறுதி நிறுவன சட்டமூலத்தை தயாரிக்குமாறு சட்ட வரைஞருக்கு ஆலோசனை வழங்க அமைச்சரவை தற்போது அனுமதி வழங்கியுள்ளது.
