உத்தியோகப்பூர்வ விஜயமாக சுவிட்சர்லாந்து சென்றுள்ள பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய, இன்று பல உயர்மட்ட சந்திப்புகளில் பங்கேற்க உள்ளார்.
பிரதமர் ஊடகப் பிரிவின் தகவலின்படி, சுவிட்சர்லாந்து ஜனாதிபதியும், பொருளாதாரம், கல்வி மற்றும் ஆராய்ச்சி அமைச்சின் தலைவருமான கீ பர்மலினுடன் அவர் முதல் சந்திப்பை நடத்தவுள்ளார்.
மேலும், பாதுகாப்பு, சிவில் பாதுகாப்பு மற்றும் விளையாட்டு அமைச்சின் தலைவரும், சுவிட்சர்லாந்து துணை ஜனாதிபதியுமான வியோலா அம்ஹெர்டுடனும் பிரதமர் கலந்துரையாடவுள்ளார்.
56வது உலக பொருளாதார மாநாடடின் ஆண்டு கூட்டத்தில் பங்கேற்பதற்காக பிரதமர் நேற்று நாட்டை விட்டு புறப்பட்டார்.
டாவோஸ்–க்ளோஸ்டர்ஸ் நகரில் நடைபெறும் இந்த உலக பொருளாதார மன்ற மாநாடு, எதிர்வரும் 23ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது.
2026ஆம் ஆண்டுக்கான இந்த மாநாட்டில், உலகின் பல நாடுகளின் தலைவர்கள், முன்னணி சர்வதேச நிறுவனங்களின் தலைமை நிர்வாகிகள், கொள்கை வகுப்பாளர்கள் மற்றும் தொழில்நுட்ப புதுமையாளர்கள் உள்ளிட்ட 3 ஆயிரத்திற்கும் அதிகமானோர் பங்கேற்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
