உலக பொருளாதார மாநாடு நடைபெறும் டாவோஸ் நகரில், ஆசிய அபிவிருத்தி வங்கியின் தலைவர் மசாடோ கண்டாவை பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய,
சந்தித்து கலந்துரையாடினார்.
இந்த சந்திப்பு உலக பொருளாதார மாநாடு நடைபெறும் சுவிட்சர்லாந்தின் காங்கிரஸ் மையத்தில் இடம்பெற்றது.
பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய தலைமையிலான இலங்கை பிரதிநிதிகள் குழு, சுவிட்சர்லாந்தின் டாவோஸ்–க்லோஸ்டர்ஸ் நகரில் நடைபெறும் 56வது உலக பொருளாதார மன்ற மாநாட்டில் பங்கேற்கின்றது.
பிரதமரையும் அவரது குழுவினரையும் சூரிச் விமான நிலையத்தில், ஜெனீவாவில் உள்ள ஐக்கிய நாடுகள் அமைப்பிற்கான இலங்கையின் நிரந்தர பிரதிநிதியும் தூதுவருமான ஹிமாலி அருணதிலகா வரவேற்றார்.
‘உரையாடலின் உணர்வு’ என்ற தொனிப்பொருளில் நடைபெறும் இந்த ஆண்டு உலக பொருளாதார மாநாட்டின்; முக்கிய அமர்வுகள் கடந்த 19ஆம் திகதி ஆரம்பமாகி, 23ஆம் திகதி வரை ஐந்து நாட்கள் தொடர்கின்றன.
இந்த மாநாட்டில் உலகின் பல நாடுகளைச் சேர்ந்த அரச தலைவர்கள், அரசாங்க பிரதிநிதிகள், சர்வதேச நிறுவனங்களின் தலைமை அதிகாரிகள், கொள்கை வகுப்பாளர்கள், தொழில்நுட்ப நிபுணர்கள், செயற்பாட்டாளர்கள் மற்றும் ஊடகவியலாளர்கள் உள்ளிட்ட சுமார் 3,000 உயர்மட்ட பிரதிநிதிகள் பங்கேற்று வருகின்றனர்.
இந்த விஜயத்தின் போது, பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய, சர்வதேச தலைவர்கள், உலக அமைப்புகளின் பிரதானிகள் மற்றும் முக்கிய பிரமுகர்களுடன் பல உயர்மட்ட இருதரப்பு கலந்துரையாடல்களை மேற்கொள்ள உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
