இலங்கைத் தீவானது இன்று சிங்கள பௌத்தர்களுக்கு மட்டுமே உரித்தான “சிங்கள தேசம்” என்று முன்னிறுத்தப்பட்டாலும், வரலாற்றின் ஆழமான பக்கங்கள் உண்மையை உரக்கச் சொல்கின்றன.
ஆனால், வரலாற்றைத் திரித்து, பல்லாயிரம் ஆண்டுகளாக இங்கு ஆதிக் குடியாக வாழ்ந்து வரும் தமிழர்களின் பூர்வீகத்தை மறைக்க நடக்கும் திட்டமிட்ட முயற்சிகளை நாம் சான்றுகளுடன் எதிர்கொள்ள வேண்டியது காலத்தின் கட்டாயமாகும். உலகில் மூத்த மொழியாகவும், செம்மொழியாகவும் திகழும் தமிழைப் போன்று சிங்களம் ஒரு தூய மொழி அல்ல. மொழியியல் ரீதியாகப் பார்க்கும்போது, சிங்களம் என்பது வட இந்தியாவில் இருந்து வந்த பாலி, சமஸ்கிருதம் மற்றும் வங்காளப் பகுதியின் மொழிகளுடன், தமிழின் வேர்ச்சொற்களும் பெருமளவில் கலந்து உருவாக்கப்பட்ட ஒரு கலப்பு மொழியாகும்.
கி.மு. காலத்திலிருந்தே உலகின் மூத்த மொழியான தமிழ் மொழியில் இலக்கியங்கள் மற்றும் கல்வெட்டுகள் உள்ள நிலையில், சிங்கள மொழிக்கு அத்தகைய நீண்ட நெடிய, தனித்துவமான வரலாறு எதுவும் கிடையாது. அது காலப்போக்கில் பல மொழிகளின் கலவையால் உருவானதே தவிர, இந்த மண்ணின் ஆதி மொழி அல்ல என்பது நிரூபிக்கப்பட்ட உண்மையாகும். சிங்கள இனம் தான் இலங்கையின் ஆதி இனம் என்று கூறுவது வரலாற்றிற்கு முற்றிலும் முரணானது. பொய்யானது.
பௌத்த நூலான மகாவம்சமே இதற்குப் பதில் சொல்கிறது:
இந்தியாவில் இருந்து நாடுகடத்தப்பட்ட விஜயனும் அவனது 700 தோழர்களும் இலங்கைத் தீவில் வந்திறங்கியபோது, அவர்களைக் குவேனி என்னும் இயக்கர் குலப் பெண்மணி வரவேற்றதாக வரலாறு கூறுகிறது. விஜயன் வரும்போதே இங்கு குவேனி என்ற அரசி வாழ்ந்திருக்கிறார் என்றால், விஜயனுக்கு முன்பே இங்கு ஒரு செழிப்பான நாகரீகம் இருந்துள்ளது. குவேனி சார்ந்த ‘இயக்கர்’ மற்றும் ‘நாகர்’ குலங்கள் என்பன தமிழர்களின் ஆதி குலங்களாகும். இவர்களே இந்த மண்ணின் மூத்தகுடிகள்.
எனவே, பிழைப்புத் தேடி வந்தவர்களே (விஜயன் வழித்தோன்றல்கள்) தங்களை மண்ணின் மைந்தர்களாகக் காட்டிக் கொள்வதும், ஏற்கனவே இங்கு ஆண்ட தமிழர்களை அந்நியர்களாகச் சித்திரிக்க முயல்வதும் மாபெரும் வரலாற்று திரிபாகும். தமிழர்களின் பூர்வீகத்தை மறைக்க நினைப்பவர்கள், இன்றும் சாட்சியாய் நிற்கும் வழிபாட்டுத் தலங்களை, தொல்லிட் சான்றுகளை மாற்றியமைக்கத் துடிக்கின்றனர். இதற்குச் சிறந்த உதாரணங்கள் கன்னியா வெந்நீரூற்று, அநுராதபுரம், கதிர்காமம் மற்றும் நயினாதீவு போன்ற பல.
கதிர்காமம்:
இது தமிழ்க் கடவுளான முருகப்பெருமானின் புனித பூமி. பல்லாயிரம் ஆண்டுகளாக தமிழர்கள் “கதிர்காமக் கந்தன்” என்று போற்றி வணங்கி வரும் தலம் இது. ஆனால், இன்று அது சிங்களமயமாக்கப்பட்டு பௌத்த இடமாகச் சித்தரிக்கப்படுகிறது. சிங்கள மொழி அல்லது பௌத்த மதம் தோன்றுவதற்கு முன்பிருந்தே தமிழர்கள் கதிர்காமத்தில் முருகனை வழிபட்டு வந்துள்ளனர் என்பதே உண்மை.
நயினாதீவு (நாகதீபம்)
பண்டைய தமிழ் இலக்கியமான மணிமேகலை காப்பியத்தில் “மணிபல்லவம்” என்று குறிப்பிடப்படும் நயினாதீவானது, தமிழர்களின் ஆதிக்குடிகளான நாகர்கள் வாழ்ந்த இடமாகும். இங்குள்ள நாகபூசணி அம்மன் ஆலயம் மிகவும் தொன்மையானது. ஆனால், இன்று அதனை “நாகதீப விகாரை” என்று முன்னிறுத்தி, அங்குள்ள தமிழ்ப் பண்பாட்டை மறைத்து, அது பௌத்தர்களுக்கு மட்டுமேயான இடமாக மாற்றும் முயற்சிகள் நடக்கின்றன.
இது போல் பற்பல உள்ளன.
இவை வெறும் மதத் தலங்கள் மட்டுமல்ல, தமிழர்கள் இந்த மண்ணின் பூர்வீகக் குடிகள் என்பதற்கான அழியாத வரலாற்று ஆவணங்கள். இலங்கையின் வரலாற்றை மாற்றியமைக்கும் முயற்சியில் தொல்லியல் திணைக்களம் (Archaeology Department) ஒரு அரசியல் ஆயுதமாகச் செயல்பட்டு வருகிறது. இத்துறையில் திட்டமிட்டே சிங்களவர்களை மட்டுமே பணிக்கு அமர்த்தி, தமிழர்களின் வரலாற்றுச் சுவடுகளை அழிக்கும் அல்லது திரிக்கும் வேலைகள் சூழ்ச்சியாக நடைபெறுகின்றன. தமிழர் பகுதிகளில் அகழ்வாராய்ச்சி செய்யும்போது கிடைக்கும் தமிழ் பிராமி கல்வெட்டுகளையும், சைவ ஆலயச் சிதிலங்களையும் மறைத்துவிட்டு, அங்கு புத்தர் சிலை இருந்ததற்கான போலி ஆதாரங்களை வலிந்து நாட்டி நிறுவ முயல்கின்றனர்.
ஆயிரம் வருடங்களுக்கு முன்பிருந்தே தமிழர்கள் இங்கு வாழ்ந்ததற்கான சான்றுகளை அழித்தாலும், உண்மையை ஒருபோதும் மண்ணிட்டு மூட முடியாது. இன்று வடக்கு-கிழக்கு பகுதிகளில் பௌத்த பிக்குகளின் தலைமையில் நடைபெறும் நில அபகரிப்புகளும், “புனித பூமி” என்ற பெயரில் நடக்கும் தமிழர் நில ஆக்கிரமிப்புகளும் சாதாரணமானவை அல்ல. இவை தமிழர்களின் இருப்பை அழித்து, இலங்கையை முழுமையாக ஒரு சிங்கள-பௌத்த நாடாக மாற்றும் கபட எண்ணத்தின் வெளிப்பாடே ஆகும்.
தொல்லியல் என்ற போர்வையில் எமது நிலங்களை அபகரித்து, அதனைச் சிங்களவர் தேசமாக மாற்ற நினைக்கும் சூழ்ச்சியைத் தமிழர்களாகிய நாம் தெளிவாகப் புரிந்து கொள்ள வேண்டும். இலங்கை என்பது சிங்களவர்களுக்கு மட்டுமே உரித்தான தனிச்சொத்து அல்ல. கதிர்காமம் முதல் நயினாதீவு வரை பரந்து கிடக்கும் சான்றுகள், தமிழர்களே இந்த மண்ணின் மூத்தகுடிகள் என்பதை ஆணித்தரமாக உணர்த்துகின்றன.
சிங்கள மொழியோ அல்லது இனமோ தூய தோற்றம் கொண்டவை அல்ல என்பதையும், அவை கலப்பினால் உருவானவை என்பதையும் வரலாறு செவ்வனவே நிரூபிக்கிறது. வரலாற்றைத் திரும்பிப் பார்க்கும்போது ஒரு கசப்பான உண்மை நெஞ்சை உலுக்குகிறது. அன்று மட்டும் விஜயனையும் அவனது கூட்டத்தையும் உள்ளே விடாமல், குவேனி அடித்துத் துரத்தியிருந்தால், இன்று தமிழர்களுக்கு இவ்வளவு பெரிய அழிவுகளும், வரலாற்றுத் திரிபுகளும் ஏற்பட்டிருக்காது.
*வந்தவர்களை வாழவைத்த பெருந்தன்மையே, இன்று தமிழர்களின் இருப்புக்கே ஆபத்தாக முடிந்துள்ளது. இது தமிழகத்திற்கும் பொருந்தும் வரலாற்றுத் திரிபுகளை முறியடித்து, எமது மண்ணின் உரிமையை நிலைநாட்ட வேண்டியது தமிழர்களின் கடமையாகும்.
