உள்ளூர் செய்திகள் முக்கிய செய்திகள்

இன்றைய வானிலை அறிக்கை. அச்சம் கொள்ளத் தேவையில்லை.

வங்காள விரிகுடாவில் உருவான தாழ் அமுக்கம் காரணமாக இலங்கையின் வட பகுதியில் கனமழை மற்றும் பலத்த காற்று வீசும் நிலை

வங்காள விரிகுடாவின் தென்மேற்குப் பகுதியில், திருகோணமலையின் வடக்கு – வடகிழக்குத் திசையில் சுமார் 100 கிலோமீற்றர் தொலைவில், இன்று காலை 4.00 மணியளவில் சக்தி மிக்க தாழ் அமுக்கம் நிலைகொண்டிருந்ததாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இந்த தாழ் அமுக்கம் இன்று காலை சுமார் 5.30 மணியளவில் நலிவடைந்து சாதாரண தாழ் அமுக்கமாக மாறி, வடமேற்குத் திசை நோக்கி நகர்ந்து செல்லும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது இன்று நண்பகல் அளவில் திருகோணமலை மற்றும் யாழ்ப்பாணத்திற்கு இடைப்பட்ட பகுதியில் இலங்கை கரையை ஊடறுத்து செல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதன் காரணமாக, நாட்டின் வட அரைப் பகுதியில் வானம் மேகமூட்டமாக காணப்படும்.

வட மாகாணத்திலும், புத்தளம், அனுராதபுரம் மற்றும் திருகோணமலை மாவட்டங்களிலும் அடிக்கடி மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும். வட மாகாணத்தின் சில பகுதிகளில் 100 மில்லிமீற்றருக்கும் அதிகமான பலத்த மழை பதிவாகும் வாய்ப்பும் உள்ளது.

நாட்டின் ஏனைய பகுதிகளின் சில இடங்களில் மாலை அல்லது இரவு வேளைகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.

வட மாகாணத்தில் மணித்தியாலத்திற்கு 50 முதல் 60 கிலோமீற்றர் வேகத்தில் அடிக்கடி மிகப் பலத்த காற்று வீசக்கூடும். சில சந்தர்ப்பங்களில் காற்றின் வேகம் மணிக்கு 70 கிலோமீற்றராக அதிகரிக்கும் வாய்ப்பும் உள்ளது. வடமேல் மாகாணத்திலும், மாத்தளை, திருகோணமலை மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் மணித்தியாலத்திற்கு 40 முதல் 50 கிலோமீற்றர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும்.

பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்கள் ஏற்படக்கூடிய சூழ்நிலையில், பொதுமக்கள் மிகுந்த அவதானத்துடன் செயற்படுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.

கொழும்பு முதல் புத்தளம், மன்னார், காங்கேசன்துறை, திருகோணமலை ஊடாக மட்டக்களப்பு வரையான ஆழமான மற்றும் ஆழமற்ற கடல் பிராந்தியங்களுக்கு மறு அறிவித்தல் வழங்கப்படும் வரை, மீனவர்களும் கடல்சார் தொழிலாளர்களும் செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும், வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிடும் எதிர்வுகூறல்களை கவனத்தில் கொள்ளுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

புத்தளம் முதல் மன்னார், காங்கேசன்துறை ஊடாக திருகோணமலை வரையான கடல் பிராந்தியங்களில் அடிக்கடி மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.

நாட்டைச் சூழவுள்ள ஏனைய கடல் பிராந்தியங்களின் சில இடங்களில் மாலை அல்லது இரவு வேளைகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.

நாட்டைச் சூழவுள்ள கடல் பிராந்தியங்களில் மணித்தியாலத்திற்கு 35 முதல் 45 கிலோமீற்றர் வேகத்தில் வட திசையிலிருந்து காற்று வீசும்.

கொழும்பு முதல் புத்தளம், மன்னார், காங்கேசன்துறை, திருகோணமலை ஊடாக மட்டக்களப்பு வரையான கடல் பிராந்தியங்களில் மணித்தியாலத்திற்கு 60 முதல் 70 கிலோமீற்றருக்கும் அதிகமான வேகத்தில் காற்று அடிக்கடி வீசக்கூடும். இதனால், குறித்த கடல் பிராந்தியங்கள் மிகவும் கொந்தளிப்பாக காணப்படும்.

மேலும், காங்கேசன்துறை முதல் திருகோணமலை வரையான கடல் பிராந்தியங்களில் கடல் அலைகள் சுமார் 2.5 முதல் 3.5 மீற்றர் உயரம் வரை எழலாம் எனவும், இதனால் தரைப் பகுதிகளுக்கு தாக்கம் ஏற்படாது எனவும் வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

You may also like

செய்திகள் வணிகம்

IMF உயர்மட்டக் குழு, ஜனாதிபதி அநுரவை சந்திப்பு

இலங்கைக்கு வருகை தந்துள்ள சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) உயர்மட்டக்
செய்திகள்

தமிழரசுக்கட்சியை கைப்பற்றினார் எம்.ஏ.சுமந்திரன் – மாவை சேனாதிராஜா – சட்டத்தரணி தவராசா திருமதி ரவிராஜ் விலகல்

எதிர்வரும் பொதுத்தேர்தலில் தமிழரசுக்கட்சி சார்பில் யாழ் தேர்தல் மாவட்டத்தில் போட்டியிடவிருக்கும்