இந்திய–இலங்கை பாதுகாப்பு ஒப்பந்தத்தில் மறைமுகமான எந்த நோக்கங்களும் இல்லை என இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா தெரிவித்துள்ளார்.
2026 ஆம் ஆண்டு இந்தியா–இலங்கை உறவுகள் மீண்டும் உற்சாகம் பெறும் மற்றும் உறுதிப்படும் ஆண்டாக இருக்கும் எனவும் அவர் கூறினார்.
கொழும்பில் நேற்று ஊடகங்களைச் சந்தித்த அவர், இரு நாடுகளுக்கிடையே நம்பிக்கை, நல்லிணக்கம் மற்றும் நட்பு உயர் நிலையில் இருப்பதாகத் தெரிவித்தார்.
பிரதமர் நரேந்திர மோடியின் இலங்கை விஜயம் மற்றும் இலங்கை பிரதமர் ஹரிணி அமரசூரியாவின் இந்திய விஜயம் இதற்கு சான்றாகும் என்றார்.
சமீபத்திய டிட்வா சூறாவளி பாதிப்புகளுக்குப் பின்னர், ‘ஒப்பரேஷன் சாகர் பந்து’ திட்டத்தின் கீழ் இந்தியா 1,100 டொன் நிவாரணப் பொருட்களை வழங்கியதாகவும், மீளமைப்புக்காக 450 மில்லியன் அமெரிக்க டொலர் மதிப்பிலான புதிய உதவித் தொகையை அறிவித்துள்ளதாகவும் சந்தோஷ் ஜா தெரிவித்தார்.
பாதுகாப்பு ஒப்பந்தம் முழுமையாக இருதரப்பு பாதுகாப்பு ஒத்துழைப்புக்காக மட்டுமே உருவாக்கப்பட்டதாகவும், அதில் மறைமுக நோக்கங்கள் எதுவும் இல்லை எனவும் அவர் வலியுறுத்தினார்.
இலங்கையின் நிதிச் சீர்திருத்தங்கள் குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளிக்க அவர் மறுத்தார்.
மேலும், இலங்கைக்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகளில் 20 சதவீதத்திற்கும் அதிகமானோர் இந்தியர்கள் எனக் கூறிய அவர், 2026 ஆம் ஆண்டில் இலங்கைக்கு வரும் வெளிநாட்டு முதலீடுகளில் 40 முதல் 50 சதவீதம் வரை இந்திய நிறுவனங்களின் பங்களிப்பாக இருக்கலாம் என நம்பிக்கை வெளியிட்டார்.
சம்பூர் சூரிய மின் நிலையம், ரயில் பாதை மேம்பாடு மற்றும் கொழும்புத் துறைமுக மேற்கு கண்டெய்னர் முனையம் போன்ற திட்டங்கள் இரு நாடுகளின் உறவை மேலும் வலுப்படுத்துவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
