யாழ்ப்பாணம்: சிறகுகள் அமையத்தின் பத்து ஆண்டு நிறைவை முன்னிட்டு, பாடசாலை மாணவர்களிடையே வாசிப்புப் பழக்கம், கற்பனைத்திறன், படைப்பாற்றல், எழுத்தாற்றல் மற்றும் ஆய்வுச் சிந்தனையை வளர்க்கும் நோக்கில் “வாசிப்பு மாதம் 2026 – இளம் எழுத்துகள் 2026” எனும் நாடளாவிய மாணவர் படைப்பாக்கப் போட்டி முன்னெடுக்கப்படுகிறது.
2016ஆம் ஆண்டு இளைஞர்களால் ஆரம்பிக்கப்பட்ட சிறகுகள் அமையம், கல்வி, வாசிப்பு, இளைஞர் தலைமைத்துவம், சமூகப் பங்கேற்பு, சமூக சேவை, சுற்றுச்சூழல் மற்றும் ஆவணப்படுத்தல் உள்ளிட்ட பல்வேறு தளங்களில் கடந்த பத்து ஆண்டுகளாக மாணவர்கள் மற்றும் இளைஞர்களை இணைத்துச் செயற்பட்டு வருகிறது. தனது பத்து ஆண்டு நிறைவை கடந்த பயணத்தை மீள்பார்ப்பதற்கும், அடுத்த பத்து ஆண்டுகளுக்கான கல்வி மற்றும் இளைஞர் செயற்பாடுகளை மேலும் வலுப்படுத்துவதற்குமான புதிய தொடக்கமாக சிறகுகள் அணுகுகிறது.
இதன் ஒரு பகுதியாக “வாசிப்பிலிருந்து படைப்பிற்கு…” என்ற கருப்பொருளில் நடைபெறும் “இளம் எழுத்துகள் 2026” போட்டியில் தரம் 1 முதல் 13 வரையான மாணவர்கள் பங்கேற்க முடியும்.
போட்டியில் தரம் 1–2 மாணவர்களுக்கு “எனது புத்தகம் – எனது வாசிப்பு உலகம்” என்ற தலைப்பில் A4 அளவில் ஓவியம்; தரம் 3–5 மாணவர்களுக்கு மாணவர் விருப்பத் தலைப்பில் 80–100 சொற்களில் கதை; தரம் 6–7 மாணவர்களுக்கு மாணவர் விருப்பத் தலைப்பில் 150–300 சொற்களில் நன்னெறிக் கதை ஆகிய பிரிவுகள் இடம்பெறுகின்றன.
அதேபோன்று தரம் 8–10 மாணவர்களுக்கு மாணவர் விருப்பத் தலைப்பில் 350–500 சொற்களில் விஞ்ஞானப் புனைவுக் கதை எழுதும் போட்டியும், தரம் 11–13 மாணவர்களுக்கு “வாசிப்பு – மாணவர்களையும் சமூகத்தையும் வலுப்படுத்தும் சக்தி” என்ற தலைப்பில் 600–800 சொற்களில் ஆய்வுக் கட்டுரை எழுதும் போட்டியும் நடைபெறுகின்றன.
இலங்கையின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் சுமார் 4,000 முதல் 5,000 மாணவர்களை இம்முயற்சியில் இணைத்துக்கொள்ள சிறகுகள் எதிர்பார்க்கிறது. மாணவர்கள் பாடசாலை ஊடாகவோ அல்லது தனிப்பட்ட முறையிலோ பங்கேற்க முடியும். ஒரு பாடசாலையிலிருந்து பங்கேற்கும் மாணவர்களின் எண்ணிக்கைக்கு வரையறை இல்லை என்பதுடன், ஆர்வமுள்ள அனைத்து மாணவர்களையும் பங்கேற்க ஊக்குவிக்குமாறு பாடசாலைகள் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளன.
தகுதியான படைப்பைச் சமர்ப்பிக்கும் ஒவ்வொரு மாணவருக்கும் பங்கேற்புச் சான்றிதழ் வழங்கப்படுவதுடன், சிறந்த படைப்புகளுக்கு விசேட அங்கீகாரமும் வழங்கப்படவுள்ளது. மேலும், போட்டியில் பெறப்படும் படைப்புகளில் இருந்து தெரிவுசெய்யப்படும் சிறந்த மற்றும் தனித்துவமான மாணவர் படைப்புகளைத் தொகுத்து சிறப்பு நூலாக வெளியிடவும் திட்டமிடப்பட்டுள்ளது.
படைப்புகளைச் சமர்ப்பிப்பதற்கான இறுதித் திகதி 31 ஒக்டோபர் 2026 ஆகும். படைப்புகளை “இளம் எழுத்துகள் 2026”, சிறகுகள் அமையம், இல. 21, சீனியர் ஒழுங்கை, யாழ்ப்பாணம், இலங்கை என்ற முகவரிக்கு அனுப்பிவைக்கலாம்.
“ஒரு குழந்தையை வாசிக்கச் செய்வதோடு நிறுத்தாமல், அந்த வாசிப்பிலிருந்து சிந்திக்கவும், கேள்வி எழுப்பவும், படைக்கவும் வழி உருவாக்குவதே இளம் எழுத்துகள் முயற்சியின் நோக்கம்” என சிறகுகள் அமையம் தெரிவித்துள்ளது.
பாடசாலை அதிபர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள் மற்றும் கல்விசார் அமைப்புகள் மாணவர்களை இப்போட்டியில் பங்கேற்க ஊக்குவிக்குமாறும் சிறகுகள் அமையம் அழைப்பு விடுத்துள்ளது.
மேலதிக தொடர்புகளுக்கு: 076 286 0975 / 076 871 2817 / 077 052 3495 / 076 672 9289 / 076 277 0566.

