நிலாவெளி கடற்கரையில் வெளிநாட்டு சுற்றுலாப் பயணி உயிரிழந்த சம்பவம் தொடர்பாக
திருகோணமலை மாவட்ட ஹோட்டல் சங்கத்தின் அறிக்கை
நிலாவெளி கடற்கரையில் நீராடிக் கொண்டிருந்த நெதர்லாந்து நாட்டைச் சேர்ந்த 49 வயதுடைய சுற்றுலாப் பயணி ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் தொடர்பாக, திருகோணமலை மாவட்ட ஹோட்டல் சங்கம் (TDHA) தனது ஆழ்ந்த அனுதாபங்களை உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும் தெரிவித்துக் கொள்கிறது.
கிடைத்துள்ள தகவலின்படி, குறித்த சுற்றுலாப் பயணி நிலாவெளி பகுதியில் அமைந்துள்ள ஒரு சுற்றுலா விடுதியில் தங்கியிருந்த நிலையில் கடலில் நீராடச் சென்றபோது இந்த துயரச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை குச்சவெளி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். பிரேதப் பரிசோதனை திருகோணமலை பொது வைத்தியசாலையில் நடைபெறவுள்ளது.
சுற்றுலா என்பது திருகோணமலை மாவட்டத்தின் முக்கிய பொருளாதாரத் துறையாகும். எனவே, உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பு எப்போதும் உயர்ந்த முன்னுரிமையாக இருக்க வேண்டும்.
திருகோணமலை மாவட்ட ஹோட்டல் சங்கம் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக, மாவட்டத்தின் முக்கிய சுற்றுலா கடற்கரைகளில் சர்வதேச தரத்திலான பாதுகாப்பு நடைமுறைகள் அமுல்படுத்தப்பட வேண்டும் என்பதைக் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. உயிர்காக்கும் (Lifeguard) சேவைகள், எச்சரிக்கை கொடிகள், பல்மொழி பாதுகாப்பு அறிவிப்புப் பலகைகள், அவசர மீட்பு உபகரணங்கள், அபாயப் பகுதிகளைத் தெளிவாகக் குறியிடுதல் மற்றும் ஒருங்கிணைந்த கடற்கரை பாதுகாப்பு முகாமைத்துவம் போன்ற பல்வேறு பரிந்துரைகளை சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு இலவச ஆலோசனையாக வழங்கியுள்ளோம்.
திருகோணமலை மாவட்டத்தின் சுற்றுலாத்துறையின் பிரதான பங்குதாரர்களில் ஒருவராக, சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பை மேம்படுத்தவும், உலகத் தரத்திலான சுற்றுலா இலக்காக திருகோணமலையை உருவாக்கவும், அரச நிறுவனங்கள், பாதுகாப்பு தரப்புகள் மற்றும் அனைத்து பங்குதாரர்களுடனும் இணைந்து பணியாற்றுவதற்கு எமது சங்கம் என்றும் தயாராக உள்ளது.
இந்த துயரமான சம்பவம், கடற்கரை பாதுகாப்பு தொடர்பான நடவடிக்கைகளை மேலும் வலுப்படுத்த வேண்டிய அவசியத்தை மீண்டும் நினைவூட்டுகிறது. இனி இதுபோன்ற உயிரிழப்புகள் ஏற்படாத வகையில் உடனடி மற்றும் நடைமுறைசார் நடவடிக்கைகள் எடுக்கப்படும் என நாங்கள் நம்புகிறோம்.
“திருகோணமலையை கிழக்கின் முத்தாக உலக அரங்கில் நிலைநிறுத்துவது எமது இலக்காகும்.”
குமார் ஜெயக்குமாரன் MBA, BSc (Hons)
தலைவர்
திருகோணமலை மாவட்ட ஹோட்டல் சங்கம் (TDHA)
What’s your Reaction?

