நேர்காணல்
த.சுபேசன்
யாழ்ப்பாணத்தில் முதலாவது சர்வதேச சைவ மாநாட்டினை வெற்றிகரமாக நிகழ்த்திய மாநாட்டு அமைப்பாளர் சமூகசேவகர் திரு நடராசா சச்சிதானந்தன் உடனான நேர்காணல்.
1)கேள்வி-அண்மையில் யாழ்ப்பாணத்தில் முதலாவது சர்வதேச சைவ மாநாடு உங்களுடைய ஏற்பாட்டில் பிரணவம் அறக்கட்டளை ஊடாக இடம்பெற்றது. மேற்படி மாநாடு என்ன நோக்கத்திற்காக முன்னெடுக்கப்பட்டது?
பதில்-இன்றைய வடக்கு மாகாணம் எதனை நோக்கி சென்று கொண்டு இருக்கின்றது என்பதனை நாம் அன்றாட செய்திகள் வாயிலாக பார்த்துக் கொண்டே இருக்கின்றோம்.பலர் அதனை செய்திகளாகவே பார்த்து விட்டு கடந்து விடுகின்றனர்.சிலர் அதனை மனதில் வைத்து வருத்தப்படுகின்றனர். ஒருசிலரே இவ்வாறான வன்செயல்களில் இருந்து நாட்டையும்-எதிர்கால சந்ததியையும் மீட்கப் போராடுகின்றனர்.அந்த வகையில் தான் அண்மையில் யாழ்ப்பாணம் நல்லூர் பகுதியில் அமைந்துள்ள இளங்கலைஞர் மன்ற மண்டபத்தில் இடம்பெற்ற சர்வதேச சைவ மாநாடும் சமுதாயத்தின் நன்மை கருதி பல தூரநோக்கு சிந்தனைகளோடு நடத்தப்பட்டது.
நாட்டில் பாலியல் பலாத்காரம்,கொலை,கொள்ளை,இலஞ்சம்,ஊழல் என நாளுக்கு நாள் எம்மைச் சுற்றி ஏதோவொரு வன்செயல் நிகழ்ந்த வண்ணமே உள்ளது.அதிலிருந்து எமது வருங்கால சந்ததியை மீட்டெடுக்க வேண்டிய கடப்பாடு ஒவ்வொருவருக்கும் உண்டு.
நீண்டகால யுத்த சூழல்,கட்டாய இடப்பெயர்வு மற்றும் புலம்பெயர்வு காரணமாக எமது சமூகத்தின் சமய விழுமியங்களும் ,வாழ்வியல் பெறுமதிகளும் இன்று பெரும் சவால்களுக்கு முகம்கொடுத்துள்ளன.மக்கள் மத்தியில் எல்லாவற்றிலும் நம்பிக்கையீனம் நிலவுவதோடு சமூகச் சீரழிவுகளான போதைப்பொருள் பாவனை,ஊழல் மற்றும் பல்வேறு துஷ்பிரயோகங்கள் வேரூன்றி வருகின்றன. கோவில்கள் பல கட்டப்பட்டாலும் அதன் அடித்தளமான சைவத்தின் ஆழமான தத்துவங்களும் ,பண்பாட்டு விழுமியங்களும் இன்றைய சந்ததியிடம் அருகிப் போய்க்கொண்டிருப்பது பெரும் கவலைக்குரியது.
இந்தச் சூழலில் எமது மக்களை இத்தகைய சிக்கல்களில் இருந்து மீட்டெடுத்து சைவம் மற்றும் தமிழின் தொன்மையையும் ,உண்மையான ஆன்மீக வாழ்வியலையும் அவர்களுக்கு உணர்த்தி ஒரு சமூக மறுமலர்ச்சியை உருவாக்குவதே சைவ மாநாடு நடத்தியதன் பிரதான நோக்கமாக உள்ளது.
2)கேள்வி-இன்றைய காலகட்டத்தில் சைவ மாநாட்டினை நடத்திய போது எதிர்கொண்ட சவால்கள் என்ன?
பதில்-சைவ மாநாடு ஒன்றினை யாழ்ப்பாணத்தில் நடத்த வேண்டும் என்ற விருப்பு எனக்கு இருந்தது.
நான்கு அமைப்புக்களை சந்தித்தே இந்த மாநாட்டினை இறுதியில் பலருடைய ஒத்துழைப்போடு வெற்றிகரமாக முன்னெடுக்க முடிந்தது.
முதலில் நான் சந்தித்த அமைப்பானது மாநாட்டினை முன்னெடுக்க கோடிக் கணக்கில் பணம் செலவாகும் என்றனர்.
இரண்டாவதாக ஒரு அமைப்பினை அணுகிய போது நல்லையாதீன குரு முதல்வர் விடயத்தில் எனக்கும்-அந்த அமைப்பின் நிர்வாகத்திற்கும் இடையே சில கருத்து முரண்பாடுகள் ஏற்பட்டன.
மூன்றாவதாக சந்தித்த அமைப்பின் சட்ட ஆலோசகருடைய ஆலோசனைகளும்-எனது எண்ணங்களும் ஒத்துப்போகவில்லை.இவ்வாறு எட்டு மாதங்கள் அலைந்த நிலையில் இறுதியாக மலையகத்தைச் சேர்ந்த பிரணவம் அறக்கட்டளையின் ஸ்தாபகர் சி.மகேஸ்பாபுவைச் சந்தித்து அவருடைய ஒத்துழைப்போடு கடந்த ஆகஸ்ட் 15ஆம் தேதி முதலாவது சர்வதேச சைவ மாநாடு யாழ்ப்பாணத்தில் வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டது.
இந்த சைவ மாநாட்டினை நடத்த யாழ்ப்பாணத்தில் உள்ள சில சைவ அமைப்புகளே எதிர்ப்புக்களைக் காட்டியிருந்தன. குறிப்பாக நாம் மாநாட்டிற்கு அழைத்திருந்த சில பிரமுகர்களை நிகழ்விற்குச் செல்ல வேண்டாம் எனத் தடுத்துள்ளனர்.ஒரு சைவ மாநாட்டினை நடத்த சைவ அமைப்புக்களே தடை போடுகின்ற செயற்பாடு எமது சைவ சமயம் எந்த இடத்தில் உள்ளது என்பதனை சுட்டிக்காட்டுகின்றது.
அனைத்து சைவ,இந்து நிறுவனங்களுடனும் இணைந்தே மாநாட்டினை நடத்துவதென்பது எமது பெருவிருப்பாக இருந்தது.
3)கேள்வி-மாநாட்டின் நோக்கம் வெற்றி பெற்றுள்ளதா?
இதன் அடுத்த கட்ட நகர்வு என்ன?
பதில்-சைவ சமயம் சம காலத்தில் எதிர்நோக்கி வருகின்ற பிரச்சனைகள்,இளைய சமுதாயத்தின் சீரழிவு,ஆலயங்களில் இடம்பெறுகின்ற பிரச்சனைகள் தொடர்பாக அலசி ஆராய்ந்து தீர்க்கமான முடிவெடுத்து சைவசமயத்தையும் -எதிர்கால சந்ததியையும் மீட்டெடுப்பதே எமது பிரதான இலக்கு.
ஒரு மாநாட்டுடன் அனைத்துமே மாறிவிடாது.
சைவ இந்து அமைப்புக்கள் வருடம் ஒரு முறையோ அல்லது இரு வருடங்களுக்கு ஒரு தடவையோ மாநாட்டினை முன்னெடுப்பதன் ஊடாகவே எமது நோக்கத்தில் நிலையான வெற்றியைப் பெற முடியும்.
எமது நோக்கம் நிறைவேற கோவை திருப்பேரூர் ஆதீனம் சாந்தலிங்க மருதாசல அடிகளார்,திருஞானசம்பந்த ஆதீனம் ஸ்ரீமத் சிவாகர தேசிக சுவாமிகள் ஆகியோர் இந்தியாவில் இருந்து மாநாட்டிற்கு வருகை தந்தனர்.அதனை விட வேலன் சுவாமிகள், பல்கலைக்கழக பீடாதிபதிகள்,பேராசிரியர்கள்,அரசாங்க அதிபர்,விரிவுரையாளர்கள் எனப் பலரும் ஒத்துழைப்பை நல்கியிருந்தனர். அவர்களுடைய ஒத்துழைப்பு தொடர்ந்து அமையும் பட்சத்தில் மாநாட்டின் நோக்கத்தில் வெற்றி பெற முடியும்.
4)கேள்வி-அண்மைக் காலமாக சைவ சமயத்திலும்-சைவ ஆலயங்களிலும் புதிது-புதிதாக முகம்சுழிக்கவைக்கக்கூடிய பல செயற்பாடுகள் இடம்பெற்றுள்ளன.அது தொடர்பாக உங்களுடைய கருத்து?
பதில்-சைவ மாநாட்டில் விருந்தினராக கலந்து கொண்ட யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் கூறியிருந்தார் கடந்த காலங்களில் நீதிமன்றங்களாக திகழ்ந்த ஆலயங்கள் இன்று தமக்குள் பிளவுகளை ஏற்படுத்தி நீதிமன்ற வாசலில் நிற்பதாகவும்-அதேநேரம் கடந்த காலங்களில் கல்விக்கூடங்களாக திகழ்ந்த ஆலயங்கள் இன்று மாணவர்கள் கல்வி கற்பதனை விரும்பாதவர்களாக அதிக ஒலியில் பாடல்களை ஒலிக்க விடுவதாகவும் சுட்டிக்காட்டிருந்தார். எமது சைவ ஆலயங்கள் குறிப்பிட்ட காலத்திற்கு எவ்வளவு தூரம் மாறிவிட்டன என்பதனை அரசாங்க அதிபருடைய கருத்து எடுத்துக் காட்டியுள்ளது.
உள்நாட்டு போருக்கு பின்னர் தமிழர் பகுதிகளில் ஆலயங்கள் பெருகி விட்டன.விண்ணைத் தொடும் அளவிற்கு கோபுரங்கள் எழுப்பப்படுகின்றன.
அதேநேரம் பல புராதன ஆலயங்கள் பராமரிப்பு இன்றி கைவிடப்பட்ட நிலையில் காணப்படுகின்றன.அவற்றில் பூஜை வழிபாடுகளும் இடம்பெறுவதில்லை.
ஆலயங்களில் திருவிழா காலங்களில் கேளிக்கை நிகழ்வுகள் அதிகரித்து விட்டன.
இந்தியாவில் இருந்து கலைஞர்கள் அழைக்கப்படுகின்றனர்.ஆனால் அவர்களுடைய கலை எமது சமயத்தோடு தொடர்புடையது அல்ல.
ஆலயங்களில் கதா பிரசங்கம்,வில்லுப்பாட்டு போன்ற எமது பாரம்பரிய கலை பண்பாட்டு நிகழ்வுகள் இடம்பெற வேண்டும்.
எமது கலைஞர்களுக்கு வாய்ப்புக்களை வழங்க வேண்டும்.
அத்துடன் புதிது புதிதாக காலத்திற்கேற்ப உடலை வருத்தி நேர்த்திக்கடன்களை நிறைவு செய்கின்றனர்.
பறவைக்காவடி,தூக்குக் காவடி ஆகியன அதில் அடங்குகின்றன.
நேர்த்திக் கடன் செய்வதனை விட ஆலயங்களில் சிரமதானம் செய்வது,அறநெறி வகுப்புக்களை நடத்துவது ,நந்தவனம் அமைப்பது போன்ற தொண்டுகளைச் செய்வதே ஆன்மீகத்தை வளர்க்கும் செயலாக அமையும்.
ஆலயங்களில் அன்னதானம் வழங்குவது வரவேற்கத்தக்க விடயம்.ஆனால் அந்த அன்னதானம் இன்றைய காலகட்டத்தில் அரசாங்க உத்தியோகத்தர்களையும்,வசதி படைத்தவர்களையுமே சென்றடைகின்றது.தேவைப்படுபவர்களுக்கு கிடைப்பதில்லை.
போரினால் முள்ளந்தண்டு வடம் பாதிக்கப்பட்டவர்கள்,அவயங்களை இழந்தவர்கள்,கட்புலன்,செவிப்புலன் பாதிப்படைந்தவர்கள் இவர்களை அன்னதானம் சென்றடைய வேண்டும்.இல்லாதவர்களுக்கு கொடுப்பது தான் தானம்.அந்தவகையில் தான் பசி உள்ளவர்களின் பசியைப் போக்குவதே அன்னதானம்.
5)சமூக நலன் கருதி எவ்வாறான சமூக நலத்திட்டங்களை முன்னெடுத்துள்ளீர்கள்?
பதில்-தனி மனிதனாக அல்லாமல் ஒரு குழுவாக ,பல அமைப்புக்களுடன் கை கோர்த்து வடக்கு-கிழக்கு மாகாணங்கள் மலையகம் என பல சேவைகளை வழங்கி வருகிறோம்.
குறிப்பாக யாழ்ப்பாணம் இராமநாதன் கல்லூரி நூற்றாண்டு விழாவையொட்டி இலண்டனில் உள்ள பழைய மாணவர்களை திரட்டி சங்கம் ஒன்றினை உருவாக்கி அதனூடாக ஒன்றரைக் கோடி ரூபாய் நிதியைச் சேகரித்து பாடசாலையில் பல அபிவிருத்திகளை முன்னெடுத்துள்ளோம்.
மேலும் வடக்கில் உள்ள 50க்கும் மேற்பட்ட ஆங்கில ஆசிரியர்களுக்கு பிரிட்டிஸ் கவுன்சில் மூலம் பயிற்சி அளித்து அவர்களை மேலும் வளப்படுத்தி சிறந்த மாணவ சமுதாயத்தை உருவாக்க நிதி ஒழுங்குகளை மேற்கொண்டுள்ளோம்.
முன்பள்ளி ஆசிரியர்களுக்கான டிப்ளோமா பயிற்சியின் அவசியம் கருதி கட்டம் கட்டமாக முன்பள்ளி ஆசிரியர்களுக்கு பல்கலைக்கழகங்கள் ஊடாக டிப்ளோமா பயிற்சி வழங்க நிதி ஒதுக்கீடுகளை முன்னெடுத்துள்ளோம்.
அதேநேரம் என்.வி.கியூ மட்டத்தில் தொழில்நுட்ப கல்லூரிகளில் கற்பதற்கான வாய்ப்புக்களையும் முன்பள்ளி ஆசிரியர்களுக்கு ஏற்படுத்திக் கொடுத்துள்ளோம்.
மலையகத்தில் ஹட்டன் பெருந்தோட்ட கிராம கல்வி அபிவிருத்தி நிறுவனம் ஊடாக முன்பள்ளி ஆசிரியர்கள் என்.வி.கியூ-04பயிற்சியைப் பெற நிதி ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
2023ஆம் ஆண்டு கல்வி அபிவிருத்திக் குழுமம் ஊடாகவும் அதனைத் தொடர்ந்து தற்போது அரும்பு கல்வி மேம்பாட்டு மையம் ஊடாகவும் லண்டனில் உள்ள பல நண்பர்கள் இணைந்து இவ்வாறான செயற்பாடுகளில் ஈடுபட்டு வருகிறோம்.
குறிப்பாக இலங்கையில் இலவச கல்வி முறையில் மாற்றம் வர வேண்டும். பாடசாலைக் கல்வியில் நம்பிக்கை இன்மையால் தான் மாணவர்களும்-பெற்றோரும் அதிக நேரம் மற்றும் பணத்தை தனியார் கல்வி நிறுவனங்களுக்கு செலவிடுகின்றனர்.இருப்பினும் மாணவர்களுடைய அடைவு மட்டம் திருப்தியாக இல்லை.
அதேநேரம் விகாரைகள்,பள்ளிவாசல்கள் மற்றும் தேவாலயங்கள் அவரவர் சமய அறிவை வளர்ப்பது போன்று சைவ ஆலயங்கள் சமய அறிவை வளர்ப்பதில்லை. எதிர்காலத்தில் இந்தக் குறைபாடுகள் நிவர்த்தி செய்யப்பட்டு வளமான ஆன்மீக பற்றுக் கொண்ட எதிர்கால சந்ததியை உருவாக்க அனைவரும் முயற்சிக்க வேண்டும்.

