மத்திய கிழக்கு மோதல் காரணமாக உலகப் பொருளாதாரத்தில் ஏற்பட்டுள்ள தாக்கங்களுக்கு மத்தியில், இலங்கையின் பொருளாதார ஸ்திரத்தன்மையை வலுப்படுத்துவதற்காக 200 மில்லியன் அமெரிக்க டொலர் நிதியுதவியை வழங்க ஆசிய அபிவிருத்தி வங்கி (ADB) தீர்மானித்துள்ளது.
இந்த நிதியுதவி, இலங்கையின் வர்த்தகம், முதலீடு மற்றும் கைத்தொழில் அபிவிருத்தியை இலக்காகக் கொண்ட கொள்கைக் கடன் திட்டத்தின் கீழ் வழங்கப்படவுள்ளது.
அதில் 100 மில்லியன் அமெரிக்க டொலர், மத்திய கிழக்கு நெருக்கடியினால் நாட்டிற்கு ஏற்பட்டுள்ள பொருளாதார அழுத்தத்தைக் குறைப்பதற்கான மேலதிக நிதியுதவியாக ஒதுக்கப்பட்டுள்ளது.
தொலைதூர மோதல் ஒன்றின் தாக்கம் காரணமாக எந்தவொரு குடும்பமும் மேலும் வறுமைக்குள் தள்ளப்படக் கூடாது என ADB தர்மகர்த்தா தலைவர் மாசாடோ காண்டா (Masato Kanda) சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும், இலங்கையில் வேலைவாய்ப்புகளை விரிவாக்குதல், புதிய முதலீடுகளை ஈர்த்தல் மற்றும் வர்த்தகத்தை ஊக்குவித்தல் என்பன இத்திட்டத்தின் பிரதான நோக்கங்களில் அடங்குவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இத்திட்டத்தின் கீழ் வர்த்தக அமைப்புகளை நவீனமயமாக்குதல், சிறு மற்றும் நடுத்தர அளவிலான தொழில்துறைகளின் போட்டித்தன்மையை உயர்த்துதல், பொருளாதார வலயங்களுக்கு முதலீடுகளைக் கொண்டுவருதல் மற்றும் ஏற்றுமதியை அதிகரித்தல் ஆகியவற்றுக்காகப் பல சீர்திருத்தங்கள் நடைமுறைப்படுத்தப்படவுள்ளன.
இச்சீர்திருத்தங்கள் ஊடாக, எதிர்காலத்தில் ஏற்படக்கூடிய பாஹிய பொருளாதார அதிர்ச்சிகளுக்கு இலங்கை பொருளாதாரம் சிறப்பாக முகங்கொடுக்கும் திறன் வலுவடையும் என ADB சுட்டிக்காட்டியுள்ளது.
இதேவேளை, மத்திய கிழக்கு மோதலின் பொருளாதாரத் தாக்கங்களால் அதிகரித்து வரும் செலவினங்கள் மற்றும் நிச்சயமற்ற தன்மையை எதிர்கொள்வதற்காக இலங்கை மற்றும் கம்போடியா ஆகிய நாடுகளுக்கு ஒட்டுமொத்தமாக 450 மில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்கவும் ADB தீர்மானித்துள்ளது. இதற்கமைய, கம்போடியாவிற்கு 250 மில்லியன் அமெரிக்க டொலர் நிதியுதவி வழங்கப்படவுள்ளது.
What’s your Reaction?

