காணாமல் ஆக்கப்பட்ட தமது உறவுகளுக்கான நீதியைத் தேடும் பயணமும், அக்குடும்பங்களின் பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்கான வாழ்வாதார உதவிகளை வழங்கும் செயற்பாடுகளும் சமாந்தரமாக முன்னெடுக்கப்பட வேண்டும், நிவாரணம் வழங்குவதானது நீதிக்கான போராட்டத்தை ஒருபோதும் முடிவுக்குக் கொண்டுவரப் பயன்படாது என வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தெரிவித்தார்.
சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தை முன்னிட்டு, காணாமல் போன ஆட்கள் பற்றிய அலுவலகத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்வு நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை யாழ்ப்பாண மாவட்டச் செயலகத்தில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே ஆளுநர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
ஆளுநர் மேலும் உரையாற்றுகையில்,
பல ஆண்டுகளாகத் தங்களது உறவுகளைத் தேடித் தவிக்கும் குடும்பங்களின் வலியை நாம் முழுமையாக உணர்கின்றோம்.
ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான தற்போதைய அரசாங்கம் காணாமல் ஆக்கப்பட்டோர் விவகாரத்துக்கு அதிக முன்னுரிமை வழங்கிச் செயற்பட்டு வருகின்றது. அதன் வெளிப்பாடாகவே காணாமல் போன ஆட்கள் பற்றிய அலுவலகத்தின் செயற்பாடுகளுக்குத் தேவையான நிதி ஒதுக்கீடுகள் தொடர்ச்சியாக வழங்கப்பட்டு வருகின்றன.
ஒரு குடும்பத்தின் வருமானம் ஈட்டுபவர் காணாமல் போயிருக்கலாம். எனவே, உண்மையைத் தேடும் விசாரணைக்கு இணையாக, அக்குடும்பங்களின் பொருளாதார மற்றும் சமூக வாழ்வை மீளக்கட்டியெழுப்புவதற்கான உதவிகளும் வழங்கப்பட வேண்டும்.
இவை இரண்டும் ஒன்றுக்கொன்று எதிரானவை அல்ல. அத்துடன், வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் மனிதப் புதைகுழிகள் தொடர்பான அகழ்வாராய்ச்சிகள் நடைபெற்று வருகின்றன. இவ்வாறான இடங்களில் கிடைக்கும் சான்றுகள் முறையாக ஆவணப்படுத்தப்பட்டு, நிபுணத்துவத்துடன் விசாரிக்கப்பட்டு நீதிச் செயல்முறைகளுக்கு உட்படுத்தப்படுவது அவசியமாகும்.
உண்மை, நீதி, நிவாரணம், கண்ணியம், மீள்நிகழாமை ஆகியன ஒன்றோடொன்று தொடர்புடையவை. உண்மையைத் தேடும் பொறுப்பிலிருந்து இந்த அரசாங்கம் ஒருபோதும் விலகாது’ என தெரிவித்தார்.

What’s your Reaction?

