கடந்த. ஜனாதிபத் தேர்தல் மற்றும் பாராளுமன்ற தேர்தல் என்பன இடம்பெற்ற காலத்தில் தற்போதைய ஆட்சியாளர்களால் பொது மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகள் பல நிறைவேற்றப்படாமல் உள்ளமை வேதனையளிக்கும் விடயமாகும். அதில் ஒன்றுதான் மாகாண சபைகளுக்கான தேர்தலை நடாத்துவோம் என்பதாகும். ஆனால் இந்த வாக்குறுதி நிறைவேற்றப்படாமல் இழுத்தடிப்பு செய்யப்படுகின்றமை பொதுமக்களின் அடிப்படை மனித உரிமையை மீறும் செயலாகும்.
இவ்வாறு அகில இலங்கை அரசாங்க பொது ஊழியர் சங்கத்தின் தலைவர் எஸ்.லோகநாதன் குறிப்பிட்டார்.
இத் தொழிற்சங்கத்தின் உயர்பீட கூட்டம் நேற்றைய தினம் (05.04.2026) மாலை கல்முனையில் இடம்பெற்றது.
இக் கூட்டத்தில் தொழிற்சங்கத் தலைவர் எஸ்.லோகநாதன் அங்கு மேலும் பேசுகையில்,
தேசிய மக்கள் சக்தி அரசாங்கமானது மாகாண சபைகளுக்கான தேர்தல்களை நடத்தாமல் நொண்டிச் சாட்டுகளைக் கூறிக்கொண்டு தமது நேரடி முகவர்களான மாகாண ஆளுநர்களை வைத்துக் கொண்டு மாகாண நிர்வாகத்தை காய் நகர்துவதைப் பார்த்தால் இவர்களுக்கும் மக்களால் நிராகரிக்கப்பட்ட மஹிந்த கம்பனிக்கும் இடையே வேறுபாட்டை காணமுடியாமல் உள்ளது.
மேலும் கடந்த வரவு செலவுத் திட்டத்தில் மாகாண சபைகளுக்கான தேர்தலை நடாத்த நிதி ஒதுக்கீடு செய்தமை ஒரு நாடகமா? என்று கேட்க வேண்டியுள்ளது.
இதே வேளை அத்தியாவசியப் பொருட்களின் விலை பன்மடங்காக அதிகரித்துள்ளது. இதற்கேற்ப ஓய்வூதியர்களுக்கான ஓய்வூதிய கொடுப்பனவுகள் அதிகரிக்கப்படாமை கவலையளிக்கும் விடயமாகும்.
ஓய்வூதியத்தினை மூன்று கட்டங்களாக அதிகரிப்பதாக வரவு செலவுத் திட்டத்தில் அளித்த வாக்குறுதியை காலம் கடத்தாமல் அரசாங்கம் தனது வாக்குறுதியை காப்பாற்ற வேண்டும்.
கடந்த காலத்தில் அரச இயந்திரத்தை சிறப்பாக கொண்டு செல்ல உழைத்தவர்கள் தமது இறுதிக் காலத்தில் மனம் நொந்து வாடாமல் இருக்க அரசாங்கம் தனது வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும் .
அத்துடன் அரச திணைக்களங்கள் பாடசாலைகள் என்பவற்றில் சுமார் ஐந்து வருடங்களுக்கு மேல் தற்காலிக மற்றும் அமைய அடிப்படையில் பணியாற்றும் ஊழியர்களுக்கு காலம் தாமதிக்காமல் நிரந்தர நியமனக் கடிதங்களை கையளிக்க அரசாங்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றார்.
இக் கூட்டத்தில் இவ்வாண்டுக்கான மேதினக் கூட்டத்தை கல்முனையில் நடாத்துவதென்ற தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது.
நிருபர்
செல்லையா பேரின்பராசா
What’s your Reaction?
