வடிகால் அமைப்புப் பணிகள் மந்தகதியில் – இரவு நேரங்களில் விபத்துகள் ஏற்படும் அபாயம்; அதிகாரிகள் உடனடியாகத் தலையிடுமாறு மக்கள் கோரிக்கை
அம்பாறை மாவட்டம் சம்மாந்துறை நாவிதன்வெளி பிரதேசத்தை இணைக்கும் சொறிக்கல்முனை – வீரமுனை எல்லைக்கு அருகில் உள்ள பிரதான வீதியில் அமைந்துள்ள ஆபத்தான வளைவுப் பகுதியில் முன்னெடுக்கப்பட்டு வரும் வடிகால் அமைப்புப் பணிகள் மந்தகதியில் இடம்பெற்று வருவதால் குறித்த வீதி இடிந்து விழும் அபாயம் ஏற்பட்டுள்ளதாகப் பொதுமக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.
தற்போது நிலவும் சீரற்ற காலநிலை மற்றும் தொடர்ச்சியான அடைமழை காரணமாக அதிகளவிலான நீரோட்டம் வடிகால் வழியாகப் பாய்ந்து வருகின்றது. இதன் காரணமாக வடிகாலின் இரு மருங்கிலும் பாரிய மண் அரிப்புகள் ஏற்பட்டுள்ளதுடன், வீதியின் உறுதித்தன்மையும் பாதிக்கப்பட்டுள்ளது.
குறித்த வடிகாலில் நிரந்தரமாகக் கொங்கிறீட் இடப்பட்டு, பாதுகாப்பு அரண்கள் அமைக்கும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற போதிலும், அவை மந்தகதியில் இடம்பெறுவதால் ஆபத்தான நிலைமை தொடர்வதாக மக்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
குறிப்பாக, குறித்த வளைவுப் பகுதியில் ஏற்கனவே பல்வேறு விபத்துச் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளதாகவும், கனரக வாகனங்கள் உள்ளிட்ட வாகனங்கள் இந்தப் பகுதியைக் கடந்து செல்லும்போது மிகுந்த அவதானத்துடன் பயணிக்க வேண்டிய நிலை காணப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
அத்துடன், வீதியில் காணப்படும் ஆபத்தான வளைவு மற்றும் போதிய பாதுகாப்பு ஏற்பாடுகள் இல்லாமை காரணமாக இரவு நேரங்களில் பாரிய விபத்துகள் இடம்பெறுவதற்கான சாத்தியக்கூறுகள் அதிகரித்துள்ளதாகவும் பொதுமக்கள் அச்சம் வெளியிடுகின்றனர்.
இதேவேளை, எதிர்வரும் பெரும்போக விவசாயச் செய்கை ஆரம்பமாகவுள்ள நிலையில், உழவு இயந்திரங்கள் உள்ளிட்ட விவசாய வாகனங்களின் போக்குவரத்தும் இவ்வீதியில் அதிகரிக்கவுள்ளது. இதற்கு மேலதிகமாக பாடசாலை மாணவர்கள், அரச உத்தியோகத்தர்கள், தனியார் நிறுவன ஊழியர்கள் மற்றும் பொதுமக்கள் எனப் பலரும் அன்றாடம் பயன்படுத்தும் முக்கியமான போக்குவரத்துப் பாதையாகவும் இவ்வீதி காணப்படுகின்றது.
எனவே, எதிர்வரும் டிசம்பர் மாதத்திற்குள் வடிகால் அமைப்புப் பணிகள் மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகள் முழுமையாகப் பூர்த்தி செய்யப்படாவிட்டால், இப்பகுதியில் பாரிய அனர்த்தமொன்று ஏற்படக்கூடிய அபாயம் உள்ளதாக மக்கள் எச்சரிக்கின்றனர்.
ஆகவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக இவ்விடயத்தில் தலையிட்டு, வடிகால் அமைப்புப் பணிகளைத் துரிதப்படுத்துவதுடன், தற்காலிக பாதுகாப்பு வேலிகள், எச்சரிக்கைப் பலகைகள் மற்றும் இரவு நேர ஒளி ஏற்பாடுகளையும் மேற்கொண்டு மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும் எனப் பொதுமக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.
நிருபர்
பாறுக் ஷிஹான்

What’s your Reaction?

