ஐஸ்’ போதைப்பொருளைத் தன்வசம் வைத்திருந்து விற்பனை செய்த குற்றச்சாட்டின் கீழ் கைது செய்யப்பட்ட நபருக்கு, கடந்த 01.07.2026 அன்று, மன்னார் மேல் நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.
கடந்த 2023 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 14 ஆம் திகதி, 5 கிராமுக்கும் அதிகமான ‘ஐஸ்’ போதைப்பொருளைத் தம்வசம் வைத்திருந்தமை மற்றும் அதனை விற்பனை செய்தமை ஆகிய குற்றச்சாட்டுகளின் கீழ் குறித்த நபர் கைது செய்யப்பட்டிருந்தார்.
மன்னார் மேல் நீதிமன்றில் இடம்பெற்று வந்த இவ்வழக்கின் விசாரணைகளின் போது, குற்றவாளிக்கு எதிரான சாட்சியங்களையும் சான்றுகளையும் அரச சட்டவாதிகளான தேவ விதுரன் மற்றும் ஆறுமுகம் தனுஷன் ஆகியோர் நெறிப்படுத்தி நீதிமன்றத்தின் முன் சமர்ப்பித்தனர்.
அரசு தரப்பால் முன்வைக்கப்பட்ட ஆதாரங்கள் அனைத்தும், குற்றவாளியின் மீதான குற்றச்சாட்டுகளைச் சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிப்பதாக அமைந்திருந்தன.
வழக்கின் அனைத்துப் பரிமாணங்களையும் சமர்ப்பிக்கப்பட்ட சான்றுகளையும் மிக ஆழமாக ஆராய்ந்த மன்னார் மேல் நீதிமன்ற நீதிபதி ஏ.ஏ. ஆனந்தராஜா, குற்றச்சாட்டுகள் அனைத்தும் சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டுள்ளதை உறுதிசெய்தார். தொடர்ந்து, குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை வழங்கி நீதிபதி தீர்ப்பை அறிவித்தார்
What’s your Reaction?

