வட மாகாணத்தின் ஏனைய மாவட்டங்களுடன் ஒப்பிடுகையில் யாழ்ப்பாண மாவட்டத்தில் காணி தொடர்பான பிரச்சினைகள் குறைவாக உள்ளதாக மாவட்ட செயலர் ம.பிரதீபன் தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாண மாவட்டத்தில் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்ற காணி உரித்துச் சான்றிதழ் வழங்கல் திட்டத்தின் செயற்பாடுகளை விரைவுபடுத்தும் நோக்கில், பயிற்சிப் பட்டறை நேற்றைய தினம் திங்கட்கிழமை யாழ்ப்பாண மாவட்டச் செயலகத்தில், நடைபெற்றது.
பயிற்சிப் பட்டறையின் ஆரம்ப நிகழ்வில் தலைமையுரையாற்றும் போதே மாவட்ட செயலர் அவ்வாறு தெரிவித்தார்.
மேலும் தெரிவிக்கையில்,
நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் இந்த திட்டம் வெற்றிகரமாக நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. அதேபோன்று யாழ்ப்பாண மாவட்டத்திலும் அரசாங்கத்தின் வழிகாட்டலின் கீழ் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வருகிறது.
இத்திட்டத்தை நடைமுறைப்படுத்தும் பணிகளில் எதிர்நோக்கப்படும் சில நடைமுறைச் சவால்கள் மற்றும் தேவைகள் தொடர்பாக மாவட்ட உதவி ஆணையாளர் முன்வைத்த கோரிக்கையின் அடிப்படையில், சம்பந்தப்பட்ட அனைத்து திணைக்களங்களையும் ஒருங்கிணைக்கும் நோக்கில் இப்பயிற்சிப் பட்டறை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
காணி உரித்து நிர்ணயத் திணைக்களத்தின் தற்போதைய மற்றும் முன்னாள் பணிப்பாளர்கள், நில அளவைத் திணைக்களம் உள்ளிட்ட தொடர்புடைய அதிகாரிகள் இந்நிகழ்வில் பங்கேற்றிருப்பதால், நிலுவையில் உள்ள பிரச்சினைகளுக்கு விரைவான தீர்வுகளைப் பெறுவதற்கான சிறந்த வாய்ப்பாக இதனைப் பயன்படுத்த வேண்டும்
யாழ்ப்பாண மாவட்டத்தில் இத்திட்டம் முதன்முதலாக நல்லூர் பிரதேச செயலாளர் பிரிவில் ஆரம்பிக்கப்பட்டுள்ளதுடன், பின்னர் ஏனைய பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கும் விரிவுபடுத்தப்பட்டு தொடர்ந்து நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது.
காணி உரிமை தொடர்பான ஆரம்ப நடவடிக்கைகள் பிரதேச செயலகங்களின் ஊடாக முன்னெடுக்கப்பட்டாலும், உரிமை ஆவணங்களைத் தயாரித்தல், பதிவு செய்தல் மற்றும் உரிய ஆவணங்களை மக்களிடம் கையளித்தல் போன்ற கட்டங்களில் சில நடைமுறைச் சிரமங்கள் காணப்படுகிறது
தனியார் காணிகளின் உரிமையை தெளிவாகவும் சட்டரீதியாகவும் உறுதிப்படுத்துவது இத்திட்டத்தின் முக்கிய நோக்கமாகும்,
வட மாகாணத்தின் ஏனைய மாவட்டங்களுடன் ஒப்பிடுகையில் யாழ்ப்பாண மாவட்டத்தில் காணி தொடர்பான பிரச்சினைகள் குறைவாக இருந்தாலும், எஞ்சியுள்ள சிக்கல்களுக்கு துரிதமான தீர்வுகளை வழங்குவது அவசியம்
காணி உரித்து நிர்ணயத் திணைக்களம் மற்றும் பதிவாளர் நாயகம் திணைக்களத்தின் அதிகாரிகள் இக் கலந்துரையாடலில் பங்கேற்றுள்ள நிலையில், இவ்வாய்ப்பை முழுமையாகப் பயன்படுத்தி நிலுவையில் உள்ள பிரச்சினைகளுக்கு விரைவான தீர்வுகளைப் பெற்றுக்கொடுத்து, மக்களுக்கு அதிகபட்ச நன்மை கிடைக்கச் செய்வதற்காக அனைத்து தரப்பினரும் ஒருங்கிணைந்த அணுகுமுறையுடன் செயற்பட வேண்டும்
என மாவட்ட செயலர் மேலும் தெரிவித்தார்.
இந்நிகழ்வில் யாழ்ப்பாண மேலதிக செயலர் கை.சிவகரன், உதவிப் பதிவாளர் நாயகம் J.K.S.K. கருணாரட்ண, காணி உரித்து நிர்ணயத் திணைக்களத்தின் ஆணையாளர் (விசாரணை) சுனேத்திரா கோரள ஆராய்ச்சி, உதவி ஆணையாளர்கள் D. ஜெயரட்ண மற்றும் O.G.C.M. குணவர்த்தன, மேலதிக உரித்துப் பதிவாளர் R.M.R. தேனுஜா பியரத்தின, உரித்துப் பதிவாளர் C.D. ஹெட்டியாராய்ச்சி, மேலதிக மாவட்ட பதிவாளர் W.A.H.L. ரத்னசூரியா, பிரதிப் பதிவாளர் நாயகம் ஆனந்தி ஜெயரட்ணம், உதவிப் பதிவாளர் நாயகம் P. தாரகா, யாழ்ப்பாண மாவட்ட காணிப் பதிவாளர் குணாஜினி, காணி உரித்து நிர்ணயத் திணைக்களத்தின் யாழ்ப்பாண மாவட்ட உதவி ஆணையாளர் த. தயாளன் மற்றும் காணி உரித்து உத்தியோகத்தர்கள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.

What’s your Reaction?

