யாழ்ப்பாணம் மாநகர சபையின் 10ஆம் வட்டாரத்தில் அமைந்துள்ள கோம்பயன் மணல் இந்து மயானத்தின் முன்பாக உள்ள பிரதான வாய்க்கால் புனரமைப்புப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டிருப்பதாக மாநகரசபை உறுப்பினர் சேதுகாவலர் மதுசிகன் தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக அவர் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கையில்;
நல்லூர், கொக்குவில், கோண்டாவில் மற்றும் யாழ் நகரின் பல பகுதிகளிலிருந்தும் வரும் மழைநீர் நாச்சிமார் கோவில் குளம், வண்ணான் குளம் பகுதி ஊடாக கோம்பயன் மணல் இந்து மயானத்திற்கு முன்னால் அமைந்துள்ள குளத்தையும், மானிப்பாய் வீதியில் அமைந்துள்ள பாலத்துடன் இணைந்துள்ள இயற்கை வடிகால் அமைப்பையும் கடந்து காக்கைத்தீவு பகுதியில் கடலை சென்றடைகின்றது.
நீண்டகாலமாக உரிய பராமரிப்பின்றிக் காணப்பட்ட இவ்வாய்க்காலில் ஏற்பட்ட அடைப்புகள் மற்றும் சேறுகள் தேங்கி இருப்பதால் மழைநீர் விரைவாக கடலை சென்றடைய முடியாத நிலை ஏற்பட்டிருந்தது. இதன் காரணமாக மாநகரசபையின் 10ஆம் வட்டார மக்கள் அடிக்கடி வெள்ளப்பெருக்கு பாதிப்புகளை எதிர்கொண்டனர்.
இந்நிலையை கருத்தில் கொண்டு, இவ்வாய்க்காலை முழுமையாக புனரமைத்து சீரமைக்க வேண்டும் என என்னால் யாழ்ப்பாண மாநகர சபையில் தொடர்ந்து முன்வைக்கப்பட்ட கோரிக்கையின் அடிப்படையில், தற்போது இப்பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளமை மகிழ்ச்சியளிக்கிறது.
வாய்க்கால் சீரமைப்புப் பணிகள் நிறைவடைந்த பின்னர் மழைநீர் வடிகால் திறன் மேம்பட்டு, வெள்ள அபாயம் குறிப்பிடத்தக்க அளவில் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இப்பணிகளை ஆரம்பிப்பதற்கு ஒத்துழைப்பு வழங்கிய யாழ்ப்பாண மாநகர சபை நிர்வாகத்திற்கும், சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கும் மாநகர முதல்வர்,உறுப்பினர்கள் மற்றும் இதற்காக ஆதரவு வழங்கிய அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.என மேலும் அவர் தெரிவித்திருந்தார்.

What’s your Reaction?

