கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையை மத்திய அரசின் கீழ் கொண்டு வருவதற்கான நடவடிக்கைகள் விரைவாக முன்னெடுக்கப்பட வேண்டும் என்றும், அதற்குத் தாம் முழுமையான ஒத்துழைப்பை வழங்கத் தயாராக இருப்பதாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதன் தெரிவித்துள்ளார்.
கிளிநொச்சி மாவட்டம் பல்வேறு துறைகளில் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்ட அவர், அடுத்த மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையை மத்திய அரசின் நிர்வாகத்தின் கீழ் கொண்டு வருவதற்கான தீர்மானம் எடுக்கப்பட வேண்டும் என வலியுறுத்தினார்.
அத்தகைய நடவடிக்கைகளுக்கு தாம் முழுமையான ஆதரவும் ஒத்துழைப்பும் வழங்குவதாகவும் அவர் உறுதியளித்தார்.
மேலும், தமக்கு சில்லறை அல்லது குறுகிய அரசியல் நோக்கங்கள் எதுவும் இல்லை என தெரிவித்த அர்ச்சுனா இராமநாதன், கிளிநொச்சி மக்களின் நலனைக் கருத்திற்கொண்டு இந்தக் கோரிக்கையை முன்வைப்பதாகக் கூறினார்.
அத்துடன், முன்னரும் பல்வேறு அரசியல் தலைவர்களுடன் ஒரே மேடையில் இந்த விடயத்தை வலியுறுத்தியுள்ளதாகவும், எதிர்காலத்திலும் தொடர்ந்து இதுகுறித்து குரல் கொடுப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

