யாழ் . மாநகரத்தைச் சுகாதாரமான மற்றும் சுற்றுலாத் தளத்துக்கேற்ற நகரமாகவும் மாற்றுவதே எமது முதன்மை இலக்காகும். இதற்குப் பொதுமக்கள் தரம் பிரித்த குப்பைகளை வழங்கி முழுமையான ஒத்துழைப்பை நல்க வேண்டும் என யாழ். மாநகரசபையின் மராமத்துக் குழுத் தலைவர் ஜெகதீஸ்வரன் மயூரன் தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற ஊடக சந்திப்பின் போதே அவ்வாறு தெரிவித்தார்.
மேலும் தெரிவிக்கையில்,
கல்லுண்டாய் பகுதி யாழ் .மாநகரசபையின் எல்லைக்கு அப்பாற்பட்டு வேறு ஒரு பிரதேசசபையின் கட்டுப்பாட்டில் அமைந்துள்ளதால், கழிவுகளை அகற்றுவதில் ஆரம்பத்தில் பல இன்னல்களையும் போராட்டங்களையும் எதிர்கொள்ள வேண்டியிருந்தது.
ஈக்கள் பெருகும் பருவங்களில் சில அசௌகரியங்கள் ஏற்படுவது இயல்பான ஒன்று. அதனைச் சாட்டுகாட்டி, நிலத் தரகர்கள் சிலரால் மக்கள் தூண்டிவிடப்பட்டு மாநகரசபைக்கு முன்னால் குழப்பங்கள் விளைவிக்கப்பட்டன.
காக்கைதீவு காணியானது சுமார் 40 ஆண்டுகளுக்கு முன்னர், சி.வி.கே.சிவஞானம் மேயராக இருந்த காலத்தில் கழிவு முகாமைத்துவத்துக்காகவே மாநகரசபையின் சொந்த நிதியில் கொள்வனவு செய்யப்பட்ட ஒன்றாகும்.
புதிய நிர்வாகம் ஆட்சிப் பொறுப்பேற்ற முதலாம் கட்டத்தில், ஆரம்ப 6 மாத காலத்துக்குரிய பட்ஜெட்டில் நிதி ஒதுக்கீடுகள் இல்லாததால் கடுமையான நிதி நெருக்கடி நிலவியது. நிதி நிலையை ஒழுங்குபடுத்திய பின்னர், கடந்த 6 மாத காலமாக காக்கைதீவு மற்றும் கல்லுண்டாய் மையங்களைச் சபை மட்டத்தில் அபிவிருத்தி செய்யும் பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன.
கழிவு முகாமைத்துவத்துக்காகப் புதிய வாகனங்கள், இயந்திரங்கள் மற்றும் நவீன தொழில்நுட்ப உத்திகள் பயன்படுத்தப்பட்டு வருவதோடு, அங்குள்ள வீதிகள் மற்றும் பசளை தயாரிக்கும் இடங்களும் மேம்படுத்தப்பட்டு வருகின்றன.
தற்போது காக்கைதீவில் மறுசுழற்சி செய்யப்படும் கழிவுகள் தவிர்க்கப்பட்டு, உக்கக்கூடிய மற்றும் பசளையாக்கக்கூடிய கழிவுகள் மட்டுமே கல்லுண்டாய் பகுதிக்கு அனுப்பி வைக்கப்படுகின்றன.
யாழ். மாநகரத்துக்குள் மாதமொன்றுக்குச் சுமார் 5 லட்சம் பயணிகள் வந்து செல்கின்றனர். அத்துடன் 1 லட்சம் நிரந்தரக் குடியிருப்பாளர்களும் வாழ்கின்றனர். இவர்கள் அனைவரது கழிவுகளையும் மாநகரசபையே முகாமைத்துவம் செய்து வருகின்றது.
தரம் பிரிக்கப்படாத கழிவுகளே பெரிய சவாலாக அமைகின்றன.
சொந்த மாநகரத்தின் கழிவுகளை வேறு இடங்களுக்கு மாற்ற முடியாது. எமது கழிவுகளுக்கான தீர்வை எமது எல்லைக்குள்ளேயே காண்பதே முறையானது.
அந்தவகையில் வீடுகளுக்கு உழவு இயந்திரங்கள் வரும் போது, பொதுமக்கள் கழிவுகளைத் தரம் பிரித்து வழங்கினால் மட்டுமே முகாமைத்துவத்தைச் சிரமமின்றி மேற்கொள்ள முடியும். அத்துடன் வீதிகளில் கழிவுகளைக் கொட்டுவதைத் தவிர்க்குமாறு பொதுமக்களிடம் கேட்டுக்கொள்கின்றோம்.
எனவே இன்னும் 6 மாத காலத்துக்குள் காக்கைதீவை ஒரு சிறந்த மறுசுழற்சி மையமாகவும், யாழ் மாநகரத்தைச் சுகாதாரமான மற்றும் சுற்றுலாத் தளத்திற்கு ஏற்ற நகரமாகவும் மாற்றுவதே எமது முதன்மை இலக்காகும். – என்றார்.
காணொளி இணைப்பு : https://www.facebook.com/reel/1747207159966577
What’s your Reaction?

