உயர் நீதிமன்ற மற்றும் மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர்களின் ஓய்வுபெறும் வயதை நீடிப்பதற்கான முன்மொழிவை இந்த ஆண்டு இறுதிக்குள் நடைமுறைப்படுத்த அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் அஜித் பி. பெரேரா தெரிவித்துள்ளார்.
இவ்வாறான திருத்தத்தை மேற்கொள்வதற்காக இதுவரை எந்தவொரு தரப்பினராலும் கோரிக்கை விடுக்கப்படாத பின்னணியில், அரசாங்கம் முன்னெடுக்கும் இந்த வேலைத்திட்டத்தின் பின்னணியில் கடுமையான பிரச்சினை உள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் சுட்டிக்காட்டியுள்ளார்.
டிவி தெரணவில் ஒளிபரப்பான ‘360’ நடப்பு விவகார நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே பாராளுமன்ற உறுப்பினர் அஜித் பி. பெரேரா இதனைத் தெரிவித்துள்ளார்.
இவ்வாறானதொரு அரசியலமைப்பு திருத்தத்தைக் கொண்டு வருவதற்கான காரணம் அல்லது அதன் அடிப்படை என்ன என்பது இதுவரை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவில்லை என்றும், எந்தவொருபாராளுமன்றக் குழுவிலும் இது குறித்து விவாதிக்கப்படவில்லை என்றும் அவர் இங்கு வெளிப்படுத்தியுள்ளார்.
யாரும் கோராத இவ்வாறானதொரு முன்மொழிவின் பின்னணியில் மறைமுக அரசியல் நோக்கம் இருப்பதாகச் சுட்டிக்காட்டிய பாராளுமன்ற உறுப்பினர், தனிப்பட்ட மட்டத்திலான குழுவொன்றின் ஊடாகத் தயாரிக்கப்பட்ட வரைவு தற்போது தனக்குக் கிடைத்துள்ளதாகவும் கூறினார்.
அங்கு தொடர்ந்து கருத்து தெரிவித்த ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் அஜித் பி. பெரேரா,
“இலங்கையின் உயர் நீதிமன்ற மற்றும் மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர்களின் ஓய்வுபெறும் வயதை அதிகரிக்குமாறு பிரதம நீதியரசர் கோரவில்லை. உயர்நீதிமன்ற நீதியரசர்களோ அல்லது மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர்களோ கோரிக்கை விடுக்கவில்லை. இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் கோரவில்லை. அத்துடன் மேல் நீதிமன்ற நீதிபதிகள் சங்கம் இதற்கு எதிர்ப்புத் தெரிவித்துள்ளது. இலங்கை சட்டத்தரணிகள் சங்கமும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளது. அதேபோல், பாராளுமன்றத்தில் இதுவரை எவரும் இவ்வாறானதொரு திருத்தத்தை மேற்கொள்வதற்கான அடிப்படை என்ன என்பதை முன்வைக்கவில்லை. பாராளுமன்றத்தின் எந்தவொரு குழுவிலும் இந்த யோசனை விவாதிக்கப்படவில்லை. அப்படியானால், யார் இவ்வாறானதொரு முன்மொழிவைக் கொண்டு வருகிறார்கள்? யாரும் இல்லை. அதாவது இதன் பின்னணியில் மறைமுக நோக்கம் உள்ளது. தனிப்பட்ட மட்டத்திலான குழுவொன்றின் ஊடாகத் தயாரிக்கப்பட்ட வரைவு எமக்குக் கிடைத்துள்ளது. அரசாங்கம் நிச்சயமாக இதனைச் செய்யும். நீதிமன்றத்தின் அதிகார சமநிலையை தங்களது அரசியல் தேவைகளுக்கு ஏற்ப மாற்றியமைப்பதற்காகவே இதனைச் செய்கிறார்கள் என்ற விடயத்தை நாம் இப்போது உறுதியாக அறிவோம். டிசம்பர் மாதத்தின் முதல் வாரத்திற்குள் இந்தத் திருத்தத்தை நிறைவேற்ற வேண்டும் என்ற இலக்கும் உள்ளது. எனவே இதில் பெரும் மர்மம் நிலவுகிறது.” என்றார்.
எவ்வாறாயினும், குறித்த முன்மொழிவு தொடர்பில் தேசிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் சந்தன சூரியஆராச்சி பின்வருமாறு கருத்து தெரிவித்தார்,
“நாட்டில் வலுவான அரச சேவையைக் கட்டியெழுப்பும் பொறுப்பு தேசிய மக்கள் சக்தியின் அரசாங்கத்திற்கு உள்ளது. அதற்கு எமக்கு வல்லுநர்கள் தேவை. நீதித்துறைக்கு அனுபவம் வாய்ந்த வல்லுநர்கள் தேவை, அவர்களின் அனுபவம் தேவை. அதனால்தான் தற்போது தொழில்சார் துறைகளில் இருந்து முன்மொழிவுகள் வந்துள்ளன; நாட்டிற்கு முக்கியமான சில தொழில்சார் துறைகளின் ஓய்வுபெறும் வயது எல்லையை மாற்றி, அந்த வல்லுநர்களிடம் இருந்து நாட்டிற்கு மேலும் சேவைகளைப் பெற்றுக்கொள்ள வேண்டும். ஏனெனில், ஒரு வருடத்திலோ அல்லது இரண்டு வருடங்களிலோ எம்மால் திடீரெனப் பலமிக்க வல்லுநர்களை உருவாக்கிவிட முடியாது. அதன் காரணமாகவே இன்று பல்வேறு வல்லுநர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். நீதித்துறையிலும் ஏனைய துறைகளிலும் உள்ள அந்த ஓய்வுபெறும் வயது எல்லையான 60 வயது, 62 வயது வரம்புகளைத் திருத்தி, அந்த வல்லுநர்களிடம் இருந்து மேலும் சேவைகளைப் பெற்றுக்கொள்ளுமாறு கோரிக்கைகள் விடுக்கப்படுகின்றன. அதன் பின்னணியிலேயே இதுவும் உள்ளது. நீதித்துறையில் நீதியரசர்களின் வயது எல்லையை அதிகரிப்பது குறித்து அரசாங்கம் இன்னும் இறுதி முடிவு எதனையும் எடுக்கவில்லை. எனினும், அது குறித்து பல்வேறு தரப்பினரிடமிருந்து கோரிக்கைகள் உள்ளன. எனவே, அரசாங்கம் அந்தக் கோரிக்கைகள் குறித்து கவனம் செலுத்துகிறது. ஆனால் இன்னும் இறுதி முடிவு எடுக்கப்படவில்லை.” என்றார்.
What’s your Reaction?

