பால்நிலை சமத்துவம் தொடர்பான தேசிய மற்றும் சர்வதேச சட்டங்கள், கொள்கை ரீதியான கடப்பாடுகள் மற்றும் அவற்றை நடைமுறைப்படுத்துவதற்கான வழிமுறைகள் தொடர்பான விழிப்புணர்வு செயலமர்வு, யாழ்ப்பாண மாவட்ட மேலதிக செயலர் கே. சிவகரன் தலைமையில் நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை மாவட்டச் செயலக செயலமர்வு மண்டபத்தில் நடைபெற்றது.
பால்நிலை சமத்துவத்தை மேம்படுத்துதல், பால்நிலை அடிப்படையிலான வன்முறைகளைத் தடுத்தல் மற்றும் அவற்றினால் ஏற்படும் பிரச்சினைகளை உரிய முறையில் கையாள்வதற்கான அறிவையும் புரிதலையும் உத்தியோகத்தர்களிடையே மேம்படுத்தும் நோக்கில் இச்செயலமர்வு ஏற்பாடு செய்யப்பட்டது.
இச் செயலமர்வில், பால்நிலை வன்முறைகளால் ஏற்படும் உளவியல் பாதிப்புகள் மற்றும் அவற்றுக்கான வழிகாட்டல்கள் தொடர்பாக உளநல மருத்துவர் வைத்தியர் ஏ. வினோதா, பால்நிலை வன்முறைகளால் ஏற்படும் உடல் ரீதியான பாதிப்புகள் மற்றும் அவற்றை அடையாளம் காணும் முறைகள் தொடர்பாக சட்ட வைத்திய நிபுணர் வைத்தியர் எஸ். பிரணவன், பால்நிலை சமத்துவம் தொடர்பான தேசிய மற்றும் சர்வதேச சட்டங்கள் மற்றும் கொள்கை ரீதியான கடப்பாடுகள் தொடர்பாக யாழ்ப்பாணப் பல்கலைக்கழக சட்டபீட சிரேஷ்ட விரிவுரையாளர் கோசலை மதன் ஆகியோர் வளவாளர்களாகக் கலந்துகொண்டு கருத்துரைகளை வழங்கினர்.
இச் செயலமர்வில் உதவி மாவட்டச் செயலாளர் உ. தர்சினி, மகளிர் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், உளவளத்துணை உத்தியோகத்தர்கள் மற்றும் மாவட்டச் செயலக சிறுவர் மற்றும் பெண்கள் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.


