நகரசபையினர் துரிதமாக செயற்பட்டு தீ பரவல் கட்டுப்படுத்தப்பட்டது.
பருத்தித்துறை நகரசபை எல்லைக்குட்பட்ட தும்பளை கிழக்கு பகுதியில் மக்கள் குடியிருப்புகளுக்கு அருகாமையில் உள்ள காணி ஒன்றில் தீ பரவல் ஏற்பட்ட நிலையில் நகரசபையின் துரிதமாக செயற்பட்டு கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்பட்டதை அடுத்து பெரும் அனர்த்தம் தவிர்க்கப்பட்டது.
பருத்தித்துறை – தும்பளை கிழக்கு, உடையார் வீதியில் வீதியோரமாக உள்ள காணி ஒன்றில் நேற்று (28.09.2026) திங்கட்கிழமை நண்பகல் 1.30 மணியளவில் தீ பரவல் ஏற்பட்டுள்ளது. குறித்த தீ வீதியோரமாக நின்றிருந்த பனை, தென்னை உள்ளிட்ட மரங்களுக்கு பரவி பற்றி எரிய ஆரம்பித்திருந்தது. காற்று மற்றும் அதிக வெப்பம் காணப்பட்ட நிலையில் தீ வேகமாக பரவியது.
இதுதொடர்பில் கிடைத்த தகவலை அடுத்து பருத்தித்துறை நகரபிதா வின்சென் டீ போல் டக்ளஸ் போல் விரைந்து செயற்பட்டு தீபரவலை கட்டுப்படுத்த நடவடிக்கை மேற்கொண்டிருந்தார். நகரசபையின் நீர்தாங்கி வாகனத்தை உடனடியாக சம்பவ இடத்திற்கு அனுப்பி வைத்ததுடன் நேரடியாக சென்று தீயணைப்பு நடவடிக்கையினை மேற்கொண்டிருந்தார்.
ஒரு மணிநேர போராட்டத்திற்கு பின்னர் தீ பரவல் முற்றாக கட்டுப்பாட்டிற்கு கொண்டுவரப்பட்டது. இதன் காரணமாக அப்பகுதிக்கான பிரதான மின் இணைப்பு வயர்கள் தீயில் கருகி அறுந்துள்ளது. இதுதொடர்பில் இலங்கை மின்சார சபையினருக்கு முறைப்பாடு செய்யப்பட்டதை அடுத்து மின் விநியோகம் துண்டிக்கப்பட்டு சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. தீ பரவலுக்கான காரணங்கள் கண்டறியப்படவில்லை. இதன்போது சில பனை, தென்னை மரங்கள் தீயில் கருகி நாசமாகின.
தகவல் கிடைத்ததும் பருத்தித்துறை நகரபிதா வின்சென் டீ போல் டக்ளஸ் போல் விரைவாக செயற்பட்டதன் காரணமாக அங்குள்ள குடியிருப்பு பகுதிகளுக்கு தீ பரவல் ஏற்படுவதற்கு முன்னதாக கட்டுப்பட்டிற்குள் கொண்டுவரப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
பூ.லின்ரன்
வடமராட்சி பச்சிளைப்பள்ளி நிருபர்

What’s your Reaction?

