பாதுகாப்புச் செயலாளர் எயார் வைஸ் மார்ஷல் (ஓய்வு) சம்பத் துய்யகொந்தா நேற்று (17.11.2026) பலாலியில் அமைந்துள்ள யாழ். பாதுகாப்புப் படைத் தலைமையகத்துக்கு (SFHQ-J) விஜயம் செய்தார்.
இதன்போது, இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் நிலந்த பிரேமரத்ன மற்றும் வடக்கு பிராந்தியத்திலுள்ள சிரேஷ்ட இராணுவ அதிகாரிகளுடன் அவர் கலந்துரையாடினார்.
இக்கலந்துரையாடலின் போது, வடக்கு பிராந்தியத்தில் இராணுவத்தின் செயற்பாட்டு மற்றும் நிர்வாக விடயங்கள் குறித்து பாதுகாப்புச் செயலாளர் விரிவாக ஆய்வு செய்ததுடன், மூலோபாயத் தேவைகள், வழங்கல் ஏற்பாடுகள், படையினரின் நலன்புரி மற்றும் ஏனைய முக்கிய இராணுவ விடயங்கள் தொடர்பில் விசேட கவனம் செலுத்தப்பட்டது.
அத்துடன், அப்பிராந்தியத்தில் பாதுகாப்புப் படைகளின் வினைத்திறனான செயற்பாடுகளை உறுதிப்படுத்துவது, தற்போதுள்ள தேவைகளை நிவர்த்தி செய்வது, செயற்பாட்டுத் திறனை மேம்படுத்துவதற்கான மேலதிக கவனம் செலுத்தப்பட வேண்டிய துறைகளை அடையாளம் காண்பது, காணி தொடர்பான விடயங்கள் மற்றும் நிறுவன ரீதியான தயார் நிலை ஆகிய குறித்தும் கலந்துரையாடப்பட்டன.
பிராந்திய மட்டத்தில் கவனம் செலுத்தப்பட வேண்டிய முக்கிய பாதுகாப்புத் தேவைகளை மதிப்பீடு செய்வதற்கும், அவை தொடர்பான விடயங்களை விரிவாக அறிந்துகொள்வதற்கும், அங்கு பணியாற்றும் சிரேஷ்ட இராணுவத் தலைமைத்துவத்துடன் நேரடியாகக் கலந்துரையாடுவதற்கும் பாதுகாப்புச் செயலாளர் இந்த விஜயத்தைப் பயன்படுத்திக்கொண்டார்.
யாழ். குடாநாட்டில் பாதுகாப்புப் படைகளின் செயற்பாட்டு மற்றும் நிர்வாக நடவடிக்கைகள் தொடர்பில் நேரடியாக அறிந்துகொள்ளும் நோக்கில் மேற்கொண்ட கள விஜயங்களின் ஒரு பகுதியாக, பாதுகாப்புச் செயலாளர் இராணுவத் தளபதியுடன் இணைந்து பலாலி இராணுவ வைத்தியசாலைக்கும் விஜயம் செய்தார்.
இதன்போது, வைத்தியசாலையில் முன்மொழியப்பட்டுள்ள கட்டடத் தொகுதியைப் பார்வையிட்ட அவர், அதன் அபிவிருத்தித் திட்டங்கள் தொடர்பிலும் மீளாய்வு செய்தார்.

