நிர்வாகப் பொது சுகாதார பரிசோதகர் ஜென்சன் றொனால்ட்
ஆரோக்கியமான நடத்தைக் கோலத்தை சிறார்களிடத்தே கட்டியெழுப்புவதே எதிர்காலசந்ததியை வினைத்திறனுடையதாக்கும் என
நிர்வாகப் பொது சுகாதார பரிசோதகர் ஜென்சன் றொனால்ட் தெரிவித்துள்ளார்.
சமூக மற்றும் நடத்தை மாற்றத்துக்கான தொடர்பாடல் பற்றிய பயிற்சியொன்று அண்மையில் பூநகரிப் பிரதேசசெயலர் பிரிவிலுள்ள முன்பள்ளி ஆசிரியர்களுக்கு நடத்தப்பட்டது. அதில் வளவாளராகக் கலந்துகொண்ட போதே அவர் மேற்படி தெரிவித்தார்.இது தொடர்பாக மேலும் அவர் கருத்துத் தெரிவிக்கையில்;
உடல் உள வளர்ச்சி மற்றும் விருத்தியில் உணர்திறன்மிக்க சிறுவர்களில் ஆரோக்கியமான நடத்தைக்கோலத்தைக் கட்டியெழுப்புவதே எமது எதிர்கால சந்ததியை வினைத்திறனுடையதாக உருவாக்கும். எனவே முன்பள்ளிப்பராயத்தில் இதுகுறித்து கூடிய கவனம் எடுக்கவேண்டும்.
கருவில் குழந்தை உருவானதிலிருந்து ஐந்து வயதுக்குள் தொண்ணூறு வீதமான மூளை வளர்ச்சி ஏற்பட்டு விடுகின்றது. எனவே இந்தக் காலப்பகுதியில் வாய்ச்சுகாதாரம் மற்றும் தனிநபர் சுகாதாரம் குறித்து பிள்ளைகள் தாமாகவே அவற்றைக் கடைப்பிடிக்கும் திறன்களை வளர்க்கவேண்டும்.
மேலும் சூழலைச் சுத்தமாகவும் பாதுகாப்பாகவும் வைத்திருக்கப் பழகுவதோடு கழிவுகளை உரிய நிறக்குறியீட்டு கூடைகளில் இடும் பழக்கத்தையும் ஏற்படுத்தவேண்டும்.
தினமும் இரண்டு விதமான மரக்கறிகள் ,ஒரு கீரைவகை ,இரண்டு விதமான பழங்களை அவர்களது உணவுத்தட்டில் சேர்க்கப் பழக்கவேண்டும்.
உள்ளூர்ப் பழங்களை உண்ணவும் பழங்களை அவற்றின் உண்மையான சுவைமாறாமல் சுவைக்கவும், மரக்கறிகளை வானவில் போல வெவ்வேறு நிறங்களில் தெரிவு செய்யவும் பழக்கவேண்டும்.
போதிய சுத்தமான நீர் அருந்துவதன் முக்கியத்துவத்தையும் சிறார்களுக்கு சொல்லிக்கொடுக்கவேண்டும்.
அதேநேரம் தினமும் மூன்றுமணிநேரம் செயற்பாடு மிக்க விளையாட்டுக்களில் பிள்ளைகளை ஈடுபடுத்தவேண்டும். இதில் ஒருமணித்தியாலமாவது வேகமான உடலசைவுகளுடன் கூடிய விளையாட்டுக்களில் ஈடுபடுத்தவேண்டும்.
எழுத்துக்களை எழுத நிர்ப்பந்திக்காது கண்களுக்கும் கைக்குமான ஒருங்கசையும் விளையாட்டுக்களையும் விரல்களால் செய்யக்கூடிய நுண்ணிய செயற்பாடுகளிலும் ஈடுபடுத்துவதன் மூலம் நுண்தசையியக்க அனுபவங்களால் மூளையில் சிறந்த தூண்டலை உருவாக்கலாம்.
டிஜிற்றல் திரைப் பயன்பாட்டு நேரத்தைக் குறைத்து வெளியிடங்களைத் தரிசித்தல், இயற்கையை இரசித்தல், இரவு வானை இரசித்தல் போன்ற சந்தர்ப்பங்களுக்கு அதிக நேரம் ஒதுக்கவேண்டும்.
முன்பள்ளிப்பருவ சிறார்களுக்கு தினமும் பத்து முதல் பதின்மூன்று மணிநேர இடையறாத தரமான தூக்கத்தைப்பெற பெற்றோர் கவனமெடுக்கவேண்டும்.
தூக்கத்துக்கான இடம் அமைதியானதாக இருப்தோடு மெல்லிய ஆடைகளை அணிதல், குறித்தநேரத்தில் நித்திரைக்கு செல்லுதல், குறித்தநேரத்தில் எழும்புதல் என்பவற்றை வழக்கமாக்கிக்கொள்ள உதவவேண்டும்.
அதேநேரம் பெற்றோரும் ஆசிரியர்களும் பிள்ளைகளின் உளநலனிலும் அதிக கவனமெடுக்கவேண்டும்.
தமது சொந்த அழுத்தங்களை பிள்ளைகள் மீது பிரயோகிக்கக்கூடாது. அவர்களது உணர்வுகளை முகபாவங்களினூடாகப் புரிந்துகொண்டு ஒத்துணர்வுப் பரிவு என்பவற்றை அவர்களுக்கு வழங்கவேண்டும்.
மேலும் வீட்டு வேலைகளில் அவர்களுக்கேற்ற பொறுப்புக்களை வழங்கி நிறைவேற்ற உதவுவதோடு அவர்களது கருத்துக்களை கேட்கவும் அவர்களோடு சேர்ந்திருக்கவும் தனியான நேரம் ஒதுக்கவேண்டும்.
சிறுவர்கள் சுதந்திரமாக செயற்பட உரிய பாதுகாப்புடன் அனுமதிப்பதோடு அவர்கள் எதையும் விமர்சன ரீதியில் கேட்டறியும் சந்தர்ப்பங்களை ஏற்படுத்திக் கொடுக்கவேண்டும்.
முக்கியமாக கெட்ட தொடுகை நல்ல தொடுகை எதுவென அவர்கள் புரிந்து கொள்ளவும், துஷ்பிரயோகங்களிலிருந்து பாதுகாப்புப் பெறக்கூடிய திறன்களையும் அவர்களில் ஏற்படுத்தவேண்டும்.
இவ்வாறு திட்டமிட்டு பெற்றோராலும் ஆசிரியர்களாலும் சமூகத்தாலும் சிறுவர்களை வழிநடத்தி எதிர்கால சந்ததியை வளம்மிக்கதாக கட்டியெழுப்பவேண்டும் என்றார்.


