மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் பிரதேச அபிவிருத்தி குழு தலைவருமான கந்தசாமி பிரபு அவர்களின் தலைமையில் முள்ளாமுனை நெல் களஞ்சியசாலையில் நெல்சந்தைப்படுத்தல் சபையானது நிர்ணய விலையில் நெல்லை நேற்று (20.07.2026) கொள்வனவு செய்தனர்.
மாவட்டத்தில் விவசாயிகளின் நெல்லை நியாயமான விலைக்கு கொள்வனவு செய்வதற்கான பணிகள் நெல் சந்தைப்படுத்தல் சபையூடாக அரசு முன்னெடுத்து வருகின்றது.
ஜனாதிபதியின் அறிவித்தலுக்கு அமைவாக நெல் சந்தைப்படுத்தல் சபை நிர்ணயிக்கப்பட்ட தரத்தில் காணப்படும் 1 கிலோ நெல்லுக்கு நாடு- 120 ரூபா, சம்பா 130 ரூபா, கீரி சம்பா 140 ரூபாவுக்கும் கொள்வனவு செய்கின்றனர்.
மாவட்டத்தில் நெல்லினை களஞ்சியப்படுத்துவதற்கு இலுப்படிச்சேனை, வவுணதீவு, முள்ளாமுனை, மணல்பிட்டி, வெல்லாவெளி, தும்பங்கேணி ஆகிய பகுதிகளில் நெல்கொள்வனவு மேற்கொள்ளப்படவுள்ளது.
இம்முறை மட்டக்களப்பு மாவட்டத்தில் 38,000 ஹெக்டயர் நிலப்பரப்பில் நெல் சாகுபடி இடம்பெற்றுள்ளதுடன், 6,000 ஹெக்டயரில் நெல் அறுவடை நிறைவடைந்துள்ளதுடன் மீதி நிலப்பரப்பில் அறுவடை எதிர்பார்க்கப்படுகிறது.
இந் நிகழ்வில் மண்முனை மேற்கு பிரதேச செயலாளர் திருமதி நமசிவாயம் சத்தியானந்தி, விவசாய அமைச்சரின் மட்டக்களப்பு மாவட்ட விவசாய அபிவிருத்திக்கான இணைப்பாளர் கி. திலகநாதன் பொலனறுவை மாவட்ட நெல் சந்தைப்படுத்தல் சபையின் அதிகாரி அதுல உடபமுனுவ, நெல் சந்தைப்படுத்தல் அதிகாரி வடிவேல் ரஜீதரன், விவசாயிகள் என பலர் கலந்து கொண்டனர்.

What’s your Reaction?

