மாவட்டச் செயலக உத்தியோகத்தர்களுக்கான ஆரோக்கியமான வேலைச் சூழல் மற்றும் உளவியல் நலன் தொடர்பான விழிப்புணர்வு நிகழ்வு, யாழ்ப்பாண மாவட்ட செயலர் மருதலிங்கம் பிரதீபன் தலைமையில் நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை மாவட்டச் செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் வளவாளராகக் கலந்து கொண்ட யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மருத்துவ பீடத்தின் பழைய மாணவரும், அவுஸ்திரேலியாவில் வைத்திய கலாநிதியாகப் பணியாற்றுபவருமான வைத்தியர் அகிலன் சிவஞானம், அலுவலகச் சூழலுக்கும் குடும்பச் சூழலுக்கும் இடையில் ஆரோக்கியமான சமநிலையைப் பேணுவதன் அவசியம் தொடர்பாக விளக்கமளித்தார்.
மேலும், பணியிடங்களில் ஏற்படும் மன அழுத்தம், அதற்கான அடிப்படைக் காரணங்கள், மன அழுத்தத்தைக் கையாள்வதற்கான நடைமுறை வழிமுறைகள், உளவியல் நலனைப் பேணுவதற்கான அணுகுமுறைகள் மற்றும் ஆரோக்கியமான வேலைச் சூழலை உருவாக்குவதில் ஒவ்வொருவருக்கும் உள்ள பொறுப்புகள் தொடர்பாகவும் கருத்துரைகளை வழங்கினார்.
இந் நிகழ்வில் மாவட்ட மேலதிக செயலர் க. சிவகரன், பதவி நிலை உத்தியோகத்தர்கள் மற்றும் மாவட்டச் செயலக உத்தியோகத்தர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.



