இலங்கை போக்குவரத்துசபையின் தலைவரை அமைச்சர் பிமல் ரத்நாயக்க அச்சுறுத்தியதன் காரணமாகவே அவர் பதவி விலகியுள்ளார்
தற்போதைய அமைச்சர்களுடன் பணியாற்ற முடியாத நிலையில் ஒவ்வொரு அதிகாரிகளும் பதவி விலகிக் கொண்டிருக்கின்றனர் என தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார அதிக அபாயம் மிக்க கொள்கலன்களும் அரசாங்கத்தின் அனுமதியுடன் விடுவிக்கப்பட்டுள்ளதாக குற்றஞ்சுமத்தினார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
அதிக அபாயம் மிக்க பொருட்களைக் கொண்ட சிவப்பு முத்திரையிடப்பட்ட 300க்கும் மேற்பட்ட கொள்கலன்கள் எவ்வித சோதனையும் இன்றி விடுவிக்கப்பட்டுள்ளன.
ஆளுனர் ஒருவரது பெயர் குறிப்பிடப்பட்டாலும் அவர் அதற்கு மறுப்பு தெரிவித்திருக்கின்றார்.
அவ்வாறெனில் யாருடைய அனுமதியில் அவை விடுவிக்கப்பட்டன? என பாராளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார கேள்வியெழுப்பியுள்ளார்
வழமையாக துறைமுகத்துக்கு வரும் கொள்கலன்களில் 35 சதவீதமானவை மாத்திரமே பரிசோதிக்கப்படும்.
கிரீன் செனல் நிறுவனம் உள்ளிட்டவற்றின் கொள்கலன்கள் பரிசோதிக்கப்படுவதில்லை.
ஆனால் இம்முறை அபாயம் மிக்கவை என குறிப்பிடப்பட்டிருந்த கொள்கலன்கள் மாத்திரம் விடுவிக்கப்பட்டுள்ளதன் பின்னணியில் உள்ள சதித்திட்டம் என்ன?
எனவே சுங்க அதிகாரிகளும் அங்குமிங்கும் பந்தினை கைமாற்றிக் கொண்டிருப்பதில் பலன் இல்லை.
இங்கு தவறு அரசாங்கத்தின் மீதே காணப்படுகிறது.
விடயத்துக்கு பொறுப்பான அமைச்சர் உட்பட முழு அமைச்சரவையும் இதற்கு பொறுப்பு கூற வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார தெரிவித்துள்ளார்
எனவே பாராளுமன்றத்தில் அனைத்துக்கும் எழுந்து விவாதிப்பதைப் போன்று இதற்கான காரணத்தையும் நாட்டுக்கு வெளிப்படுத்துமாறு பாராளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளார்

