கல்முனை அஷ்ரஃப் ஞாபகார்த்த வைத்தியசாலையின் என்பு முறிவு சிகிச்சைப் பிரிவை (Orthopaedic Unit) நவீனப்படுத்தி, நோயாளர்களுக்கான இடவசதி மற்றும் சிகிச்சைத் தரத்தை மேம்படுத்தும் நோக்கில் விரிவாக்கம் செய்யப்பட்ட புதிய ஆண் மற்றும் பெண் விடுதிகள் நேற்று (26.11.2026) உத்தியோகபூர்வமாகத் திறந்து வைக்கப்பட்டன.
வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் டாக்டர் ஐ.எல்.எம். றிபாஸ் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இத்திறப்பு விழாவின் ஊடாக, என்பு முறிவு சிகிச்சைக்காக உள்நோயாளர்களாக அனுமதிக்கப்படுவோர் இதுவரை எதிர்கொண்ட இடநெருக்கடிக்கு நிரந்தரத் தீர்வு காணப்பட்டுள்ளதுடன், நோயாளர் பராமரிப்புச் சேவைகளும் மேலும் வலுப்படுத்தப்பட்டுள்ளன.
இந்நிகழ்வில் வைத்தியசாலையின் பதில் வைத்திய அத்தியட்சகர் டாக்டர் ஏ.எல். பாறூக், என்பு முறிவு விசேட வைத்திய நிபுணர் டாக்டர் எஸ். வருண்பிரசாந்த், சத்திரசிகிச்சை நிபுணர் A.W.M. சமீம், விசேட மயக்க மருந்து நிபுணர் டாக்டர் கே. சுதேஸ்வரி, பிரிவுகளுக்குப் பொறுப்பான வைத்தியர்கள், கணக்காளர், நிர்வாக உத்தியோகத்தர், தாதிய பரிபாலகி, தாதிய உத்தியோகத்தர்கள் உள்ளிட்ட மருத்துவ மற்றும் நிர்வாக உத்தியோகத்தர்கள் பலரும் கலந்துகொண்டனர்.
பிராந்திய மக்களுக்குத் தடையற்ற, தரமான சுகாதார சேவைகளை வழங்கும் நோக்கில் வைத்தியசாலையின் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தும் இத்தகைய முன்னெடுப்புகள், இப்பிராந்தியத்தின் சுகாதாரத் துறையில் ஒரு முக்கிய மைல்கல்லாக அமைந்துள்ளன.



