தீவக சிவில் அமைப்பின் உப தலைவர் குணாளன் காவாலிகளின் வாள்வெட்டுக்கு இலக்காகி பலத்த காயமடைந்த நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
நீதிமன்றம் நோக்கிச் சென்ற கருணாகரன் குணாளன் மீது யாழ்ப்பாணம் – ஊர்காவற்றுறை வீதியில் மண்கும்பான் ஆலயத்திற்கும் அராலி சந்திற்கும் இடையில் இன்று காலை இடம்பெற்ற வாள்வெட்டுச் சம்பவத்தில் குணாளன் பலத்த காயமடைந்த நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ஊர்காவற்றுறை பொலிஸார் கொலை முயற்சிக்குக் காரணமானவர்கள் மீது வழக்குத் தொடர்ந்து, அந்தக் கும்பலைச் சேர்ந்தவர்களைத் தேடி வருகின்றனர்.
ஊர்காவற்றுறை நீதிமன்றில் பேருந்து உரிமையாளர் அகிலன் கொலை தொடர்பில் கொலையாளிகளை அடையாளம் காட்டும் வழக்குத் தவணைக்காக முன்னிலையாவதற்கு யாழ்ப்பாணத்திலிருந்து ஊர்காவற்றுறை நோக்கிச் சென்று கொண்டிருந்தபோதே அவர் மீது இனந்தெரியாத மூன்று பேர் கொண்ட கும்பல் தாக்குதல் நடத்தியுள்ளது.
தீவுப் பகுதியில் இடம்பெற்ற சட்டவிரோத மாடுகடத்தல் மற்றும் கசிப்பு காய்ச்சுதல், வீடுகள் உடைத்து களவுகள் மற்றும் வாள்வெட்டுச் சம்பவங்கள் அதிகரித்த நிலையில் அவற்றுக்கு எதிராக செயற்பட்டு வந்தார்.
இக் கொலை முயற்சியை மேற்கொண்டவர்கள் என ஊர் மக்களால் சந்தேகிக்கப்படும் நபர், பூங்குடுதீவு ஏழாம் வட்டாரத்தை வசிப்பிடமாகக் கொண்ட ‘படையப்பா’ என அழைக்கப்படும் வரதராசா லிக்ஸான் என்ற காவாலியே காரணம் எனக் கூறப்படுகின்றது. குணாளன் சில நாட்கள் முன்பு பொலிஸ் அதிகாரிகளுடன் இணைந்து பசுமாடுகள் களவாடப்பட்டு ஒரு மாடு வெட்டப்பட்ட நிலையில், சிவில் சமூக அமைப்பினரால் மற்ற மாடுகள் வெட்டப்படாமல் தடுக்கப்பட்ட சம்பவத்தில் முன்னின்று செயல்பட்டமையே இச்சம்பவத்திற்கான காரணம் எனத் தெரியவருகின்றது.
இச்சம்பவத்தினை மேற்கொண்ட நபர் பல குற்றங்களுடன் தொடர்புடையவர். இந்த நபரை அடையாளம் காணும்போது உடனடியாகப் பொலிஸாருக்குத் தெரியப்படுத்துமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறீர்கள்.
What’s your Reaction?

