வேலணை மத்திய கல்லூரியின் புதிய அதிபராகவும், பாடசாலை வரலாற்றில் முதலாவது பெண் அதிபராகவும் திருமதி ஜொய்ஸ் நியூட்டன் சுதர்சினி இன்று (19.11.2026) உத்தியோகபூர்வமாகப் பொறுப்பேற்றுள்ளார்.
நீண்டகாலமாக நிலவி வந்த அதிபர் பதவி வெற்றிடத்துக்கான இழுபறிக்கு, புதிய அதிபரின் நியமனத்துடன் முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.
பாடசாலையில் இறுதியாண்டுப் பரீட்சைகள் நடைபெற்று வரும் நிலையில், மாணவர்களின் கல்விச் செயற்பாடுகளுக்கு இடையூறு ஏற்படாத வகையில், பொறுப்பேற்பு நிகழ்வு மிகவும் எளிமையாக நடைபெற்றது.
விநாயகருக்கான இந்து சமய வழிபாடுகளுடன் ஆரம்பமான நிகழ்வு, பாடசாலை வளாகத்தில் அமைந்துள்ள நடராஜர் ஆலயத்தில் விசேட பூஜை வழிபாடுகளுடன் முன்னெடுக்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து, புதிய அதிபர் தனது கடமைகளை உத்தியோகபூர்வமாகப் பொறுப்பேற்று, முதலாவது கையொப்பமிட்டு பணிகளை ஆரம்பித்தார்.
இந்நிகழ்வில் அயற்பாடசாலைகளின் அதிபர்கள், கல்வித்திணைக்கள அதிகாரிகள், பழைய மாணவர் சங்க உறுப்பினர்கள், பாடசாலை அபிவிருத்திச் சங்க உறுப்பினர்கள், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டு புதிய அதிபரை வரவேற்றனர்.
முன்னதாக, வேலணை மத்திய கல்லூரியின் அதிபராகப் பணியாற்றிய கஸ்ரன்ரோய், யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியின் அதிபராக நியமனம் பெற்று சென்றதைத் தொடர்ந்து, வேலணை மத்திய கல்லூரியில் அதிபர் பதவிக்கான வெற்றிடம் ஏற்பட்டிருந்தது.
இதனை நிரப்புவதற்காக கல்வித் திணைக்களத்தினால் விண்ணப்பங்கள் கோரப்பட்டு, விண்ணப்பதாரர்களுக்கான நேர்முகத் தேர்வுகள் நடத்தப்பட்டன.
தகைமைகள் மற்றும் நியமன நடைமுறைகளின் அடிப்படையில் திருமதி ஜொய்ஸ் நியூட்டன் சுதர்சினி தெரிவு செய்யப்பட்டு, மாகாணக் கல்வி அமைச்சினால் நியமனம் வழங்கப்பட்டிருந்தது.
இதனையடுத்து, இன்று (19) அவர் வேலணை மத்திய கல்லூரியின் புதிய அதிபராக உத்தியோகபூர்வமாகப் பொறுப்பேற்றுள்ளார்.
பாடசாலை வரலாற்றில் முதலாவது பெண் அதிபராகப் பொறுப்பேற்றுள்ள அவரது நியமனம், கல்லூரியின் நிர்வாகப் பயணத்தில் புதிய அத்தியாயமாக அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.





What’s your Reaction?

