மயூரப்பிரியன்
செம்மணி மண்ணுக்குள் புதைக்கப்பட்டவர்களின் நீதிக்காக 30 ஆண்டுகள் தாண்டியும் ஏங்கிக்கொண்டு இருக்கிறோம். ஆனால் மாறி மாறி வரும் அரசாங்கங்கள் உள்ளக விசாரணைப் பொறிமுறைகள் என காலத்தை இழுத்தடித்து, எமக்கு ஏமாற்றத்தை மட்டுமே பரிசளித்துள்ளனர்,
அதனால் தான் உண்மையை வெளிக்கொணரவும், குற்றவாளிகளை சட்டத்தின் முன் நிறுத்தவும் சர்வதேச நீதிப் பொறிமுறையே அவசியம் என கோரி வருகிறோம் என பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் தெரிவிக்கின்றனர்
இவ்வாறான நிலையில் செம்மணி சிந்துபாத்தி இந்து மாயான பகுதியில் அடையாளம் காணப்பட்ட மனித புதைகுழியில் , மூன்று கட்டங்களாக 110 நாள் அகழ்வு பணிகள் முன்னெடுக்கப்பட்டு, 583 என்பு கூடுகள் அகழ்ந்து எடுக்கப்பட்டமை தொடர்பில் புதைகுழி ஆய்வு பணியில் ஈடுபட்டிருந்த தொல்லியல் பேராசிரியர் ராஜ் சோமதேவாவினால், நீதிமன்றில் சமர்ப்பிக்கப்பட்ட மூன்றாவது இடைக்கால அறிக்கையில் தொற்றுநோய் அல்லது இயற்கைப் பேரழிவில் உயிரிழந்தவர்களை புதைத்ததாக இருக்கலாம் என குறிப்பிடப்பட்டது பாதிக்கப்பட்ட மக்களின் ஆறா வடுவில் பேரிடியாக இறங்கியது.
அந்த அறிக்கையை முற்றாக தாம் நிராகரிப்பதாக வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் , தமிழ் அரசியல் தலைவர்கள் தெரிவித்தனர்.
இந்நிலையில் நேற்றுமுன்தினம் செவ்வாய்க்கிழமை யாழ்ப்பாணத்தில் செம்மணி மனித புதைகுழி தொடர்பில் சர்வதேச விசாரணைகள் தேவை எனவும் , தொல்லியல் பேராசிரியரின் இடைக்கால அறிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்தும் நாடாளுமன்ற உறுப்பினர்களான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் , சிவஞானம் சிறிதரன் ஆகியோரின் பங்கேற்புடன் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களின் சங்கம் போராட்டத்தை முன்னெடுத்ததுடன் , போராட்டத்தின் முடிவில் ராஜ் சோமதேவாவின் கொடும்பாவியையும் , அவரது இடைக்கால அறிக்கையையும் தீயிட்டு கொளுத்தினர்.
இவ்வாறான நிலையில் இன்றைய தினம் வியாழக்கிழமை செம்மணி புதைகுழி தொடர்பான நிர்வாக கூட்டம் யாழ்ப்பாண நீதவான் நீதிமன்ற நீத்தவனின் தலைமையில் நடைபெறவுள்ளது.
அதில் தொல்லியல் பேராசிரியரின் அறிக்கை தொடர்பில் காரசாரமான கருத்துக்களை பாதிக்கப்பட்டவர்கள் நலன் சார்ந்து முன்னிலையாகவுள்ள சட்டத்தரணிகள் முன் வைக்கும் சாத்தியம் உண்டு.
அதேவேளை கடந்த மாதம் 19ஆம் திகதி நடைபெற்ற செம்மணி மனித புதைகுழி வழக்கில், செம்மணி புதைகுழி தொடர்பான முக்கிய சாட்சியமாக கருதப்படும் கிரிசாந்தி கொலை வழக்கின் மரண தண்டனை கைதியான லான்ஸ் கோப்ரல் சோமரத்ன ராஜபக்சேவிடம் விசாரணைகளை மேற்கொண்டு , வாக்கு மூலங்களை பெற்றுக்கொள்ள குற்ற புலனாய்வு பிரிவினருக்கு யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்று அனுமதி வழங்கி இருந்தது.
அதன் அடிப்படையில் சோமரத்ன ராஜபக்சேவிடம் குற்றப்புலனாய்வு பிரிவினர் பெற்ற வாக்கு மூலங்கள், நாளைய தினம் வியாழக்கிழமை நடைபெறவுள்ள நிர்வாக கூட்டத்தில் அது தொடர்பான விபரங்களை தெரிவிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
அது மாத்திரமின்றி புதைகுழியின் கால எல்லையை அறிவதற்காக கார்பன் (C – 14) பரிசோதனைகளை செய்வதற்கான அனுமதியை கடந்த 19ஆம் திகதி நீதிமன்றில் நடைபெற்ற வழக்கு விசாரணையின் போது, குற்றப்புலனாய்வு பிரிவினர் கோரிய போது , நவம்பர் 19ஆம் திகதி நடைபெறும் நிர்வாக குழு கூட்டத்தில் ஆராய்வதாக மன்று கூறியிருந்த நிலையில் , நாளைய தினம் அது தொடர்பிலும் முடிவுகள் எடுக்கப்படவுள்ளது.
அதேவேளை மூன்றாம் கட்ட அகழ்வு பணிகளின் இறுதி கட்டங்களில், புதைகுழி தவிர்ந்த ஏனைய 14 இடங்களில் எழுமாற்றாக அகழப்பட்ட சோதனைக்குழிகளில் , 05 சோதனைக்குழிகளுக்குள் , 08 என்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டு , அவை அகழ்ந்து எடுக்கப்பட்டன.
அதனால் மேலும் குறித்த பகுதிகளில் என்புக்கூடுகள் காணப்படலாம் எனும் சந்தேகம் நிலவுவதனால் , நான்காம் கட்ட அகழ்வு பணிகளை முன்னெடுப்பது தொடர்பிலும் , நாளைய கூட்டத்தில் முக்கிய முடிவுகள் எடுக்கப்படலாம் .
இவ்வாறாக இன்றைய தினம் வியாழக்கிழமை செம்மணி மனித புதைகுழி தொடர்பிலான நிர்வாக குழு கூட்டத்தில் முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படும் நிலையில் , செவ்வாய்க்கிழமை முன்னெடுக்கப்பட்ட போராட்டத்தின் போது , வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் முக்கிய கோரிக்கைகளையும் முன் வைத்துள்ளனர்
அதாவது, பேராசிரியர் ராஜ் சோமதேவா, அனுஷா வன்னிநாயக்கே ஆகியோரால் சமர்ப்பித்துள்ள இடைக்கால அறிக்கையை இறுதியான தடயவியல் முடிவாக ஏற்றுக்கொள்ளக் கூடாது. அதன் குறைபாடுகள் சுயாதீனமாக மதிப்பீடு செய்யப்பட வேண்டும்.
சர்வதேச அங்கீகாரம் பெற்ற தடயவியல் தொல்லியல் நிபுணர்கள், தடயவியல் மருத்துவர்கள், மனித எலும்பியல் நிபுணர்கள், மரபணு ஆய்வாளர் கள் மற்றும் மனித உரிமைகள் சார்ந்த நிபுணர்கள் அடங்கிய சுயாதீன சர்வதேச நிபுணர் குழு நியமிக்கப்பட வேண்டும்.
அத்தரப்பினர் செம்மணி – சித்துப்பாத்தி தொடர்பான ஆய்விலும், அகழ்விலும் பார்வையாளர்களாக அல்லாமல் நேரடிப்பங்கேற்பாளர்களாக ஈடுபடல் வேண்டும்.
அகழ்ந்தெடுக்கப்பட்ட அனைத்து மனித எச்சங்களும் சர்வதேச தரத்திலான தடயவியல் பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்பட வேண்டும். குறிப்பாக மரணத்திற்கான காரணம், காயங்களின் தன்மை, மரணத்தின் காலப்பகுதி மற்றும் புதைக்கப்பட்ட சூழ்நிலைகள் தொடர்பில் விரிவான ஆய்வுகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.
கண்டெடுக்கப்பட்ட மனித எச்சங்களை அடையாளம் காண்பதற்காக காணாமல் ஆக்கப்பட்டவர்களின் குடும்பங்களிடமிருந்து DNA மாதிரிகள் பெறப்பட்டு, சர்வதேச தரத்திலான மரபணு ஒப்பீட்டு ஆய்வுகள் முன்னெடுக்கப்பட வேண்டும்.
செம்மணி – சித்துப்பாத்தி அகழ்வாய்வின் அனைத்து கட்டங்களும் முழுமையான காணொளி, புகைப்படம், வரைபடம், ஆவணப்படுத்தல் மூலம் வெளிப்படைத்தன்மையுடன் மேற்கொள்ளப்பட வேண்டும். அனைத்து ஆதாரங்களும் பாதுகாக்கப்பட வேண்டும்.
அகழ்வாய்வில் கண்டெடுக்கப்பட்ட மனித எச்சங்கள், அவற்றுடன் தொடர்புடைய பொருட்கள், ஏனைய ஆதாரங்கள் அனைத்தும் உரிய சட்டப் பாதுகாப்புடன் பேணப்பட வேண்டும். அவை அழிக்கப்படுவதையோ, மாற்றப்படுவதையோ, ஆதாரங்கள் பாதிக்கப்படுவதையோ தடுப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும்.
செம்மணி மனிதப் புதைகுழி தொடர்பில் முன்னர் வெளிப்படுத்தப்பட்ட சாட்சியங்கள், வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பான பதிவுகள், நீதிமன்ற ஆவணங்கள், வரலாற்று ஆதாரங்கள் அனைத்தும் ஒருங்கிணைக்கப்பட்டு சர்வதேச விசாரணைக்கு கொண்டுசெல்லப்படல் வேண்டும். இதுபோன்று அறிக்கைகளில் விளையாடும் உள்ளக நீதிவிசாரணையை நாம் முற்றாக நிராகரிக்கின்றோம்.



What’s your Reaction?

