மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டங்களில் துறைசார் அதிகாரிகள் அனைவரும் கட்டாயம் கலந்துகொள்ள வேண்டும் என கடற்தொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் அறிவுறுத்தியுள்ளார்.
யாழ்ப்பாணம் மாவட்ட ஒருங்கிணைப்பு குழுக் கூட்டம் மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் நேற்றைய தினம் புதன்கிழமை நடைபெற்றது.
இக் கூட்டத்தில் கல்வி, சுகாதாரம், விவசாயம் உள்ளிட்ட பல்வேறு முக்கிய துறைகளின் பொறுப்பதிகாரிகள் சமூகமளிக்கவில்லை. அது தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் அருச்சுனா இராமநாதன் கேள்வி எழுப்பியிருந்தார்.
அதனை தொடர்ந்து ஒருங்கிணைப்பு குழு இணைத்தலைவரும் , கடற்தொழில் அமைச்சருமான இராமலிங்கம் சந்திரசேகர் கருத்து தெரிவிக்கையில்,
மாவட்டத்தின் அபிவிருத்தி தொடர்பான முக்கிய தீர்மானங்கள் எடுக்கப்படுவதுடன், மக்களின் பிரச்சினைகள் ஆராயப்பட்டுத் தீர்வுகளைப் பெற்றுக்கொடுப்பதற்கான நடவடிக்கைகள் இக்கூட்டங்களின் ஊடாக முன்னெடுக்கப்படுகிறது.
எனவே, அதிகாரிகள் தமக்கு ஒதுக்கப்பட்ட பொறுப்புகளைத் தவிர்க்க முடியாது. தவிர்க்க முடியாத காரணங்களால் கூட்டத்தில் கலந்துகொள்ள முடியாத அதிகாரிகளுக்குப் பதிலாகப் பொறுப்பு வாய்ந்த பிரதிநிதி ஒருவர் கட்டாயம் பங்கேற்க வேண்டும்.
தூரப் பிரதேசங்களில் பணியாற்ற வேண்டியிருப்பதையோ அல்லது உயர் அதிகாரிகளுடன் ஏற்கெனவே கலந்துரையாடியிருப்பதையோ காரணமாகக் கொண்டு கூட்டங்களில் பங்கேற்பதைத் தவிர்க்க முடியாது
இனிவரும் காலங்களில் இவ்விடயத்தில் எவருக்கும் விதிவிலக்கு வழங்கப்படமாட்டாது.
தற்போதைய அரசாங்கத்தின் கீழ் எவருக்கும் விசேட சிபாரிசுகள் வழங்கப்படுவதில்லை என்பதுடன், எவருக்கும் தேவையற்ற அழுத்தங்கள் பிரயோகிக்கப்படுவதுமில்லை என்பதை அதிகாரிகள் புரிந்துகொண்டு தமது கடமைகளைப் பொறுப்புடன் நிறைவேற்ற வேண்டும் என மேலும் தெரிவித்தார்.
What’s your Reaction?

