வரலாற்றில் தமிழினம் கடந்து வந்த கரடுமுரடான பாதைகளையும், அது நமக்குக் கற்றுத் தந்த வரலாற்றுப் படிப்பினைகளையும் ஆழமாக உள்வாங்கி, உலகரங்கில் எமது தலைமுறையைத் தலைநிமிர்ந்து நிற்கச் செய்யும் பேராற்றலும் வல்லமையும் சிறார்களாகிய உங்களின் கைகளிலேயே உள்ளது” என எதிர்காலத் தலைவர்களின் மத்தியில் இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்தார்.
மகாதேவா சுவாமிகள் சிறுவர் இல்லத்தில்( குருகுலம்) நடைபெற்ற தையல் பயிற்சிநெறி ஆரம்பமும், சிறுவர் தினம், முதியோர் தினம் மற்றும் ஆசிரியர் தினம் ஆகியவற்றுக்கான ஒருங்கிணைந்த நிகழ்வின் பிரதம விருந்தினராகக் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இன்றைய நாள் வெறும் கொண்டாட்டத்திற்கான நாள் மட்டுமல்ல; எமது தமிழ் தேசிய இனத்தின் எதிர்காலத்தை வழிநடத்தும் வல்லமைமிக்க ஆளுமைகளாக நீங்கள் ஒவ்வொருவரும் உருவெடுக்க வேண்டியதன் அவசியத்தை உணர்த்தும் ஒரு முக்கியமான நாளாகும். ஒரு வலுவான தேசிய இனத்தின் தூண்களாக நீங்கள் உயர வேண்டுமாயின், சிறந்த கல்வி, சிந்தனைத் தெளிவு மற்றும் கொள்கைப் பற்று ஆகியவை மிக அவசியமாகும்.
நவீன உலகிற்கு ஏற்ப அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் சர்வதேச அரசியல் சார்ந்த அறிவை வளர்த்துக் கொள்ளும் அதேவேளையில், எந்தவொரு சூழலிலும் நேர்மையையும் சமூகப் பொறுப்பையும் கைவிடாத தலைவர்களாக நீங்கள் வளர வேண்டும். மகாதேவா சுவாமிகள் சிறுவர் இல்லத்திற்கு நான் வரும்போதெல்லாம் என் மனதிற்குள் அளப்பரிய நெகிழ்ச்சியும் மகிழ்ச்சியும் ஏற்படுவது வழக்கம். நானும் இங்கே ஒரு மாணவனாகக் கல்வி பயின்று, எல்லோரது பெருமதிப்பிற்குரிய குருகுல பிதா அப்புஜி அவர்களின் வழிகாட்டலிலும் அரவணைப்பிலும் வளர்ந்தவன் என்ற பெருமிதமும் எனக்குண்டு.
இன்றைய சிறுவர்களாகிய நீங்கள் நாளைய வரலாற்றைப் படைக்கும் நாயகர்கள்! சூழ்நிலைகளைக் கண்டு தயங்கி நிற்காமல், தோல்விகளைக் கண்டு அஞ்சாமல், தமிழ் சமூகம் பெருமை கொள்ளும் வகையில் உயர்ந்த தலைமைத்துவப் பண்புகளோடு உங்களை நீங்கள் வளர்த்துக்கொள்ள வேண்டும்” என்றார்.
இதன்போது ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கான பரிசளிப்பு நிகழ்வும், தையல் பயிற்சிநெறியின் ஆரம்ப வைபவமும் நடைபெற்றது.
மகாதேவா சுவாமிகள் சிறுவர் இல்லத்தின் தலைவர் திரு. ச. மோகனபவன் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், கௌரவ விருந்தினர்களாக கிளிநொச்சி இந்துக்கல்லூரியின் முதல்வர் திரு. ப. ஜோயல் பியசீலன், கிளி/கிளிநொச்சி இந்து ஆரம்ப வித்தியாலய முதல்வர் திரு. அந்தோனிப்பிள்ளை அன்ரன் டயஸ் ஆகியோர் கலந்துகொண்டனர்.


