யாழ்ப்பாணம் , நெல்லியடி பகுதியில், புதிதாக மதுபானசாலை அமைப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து கண்டனப் போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.
மண்டான் கலைநேசன் சனசமூக நிலையத்டிற்கு அருகில் இன்றைய தினம் திங்கட்கிழமை ஆரம்பிக்கப்பட்ட போராட்டம் அங்கிருந்து பேரணியாக மண்டானில் அமைந்துள்ள மதுவரித் திணைக்களத்தின் முன்னால் ஒன்றுகூடி தமது எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.
அதன் போது, நெல்லியடியில் மதுபானசாலை அமைப்பதற்கு எதிராகப் பொதுமக்களிடம் பெறப்பட்ட கையெழுத்துகள் அடங்கிய மகஜர், மண்டானில் அமைந்துள்ள மதுவரித் திணைக்களத்தின் பொறுப்பு அதிகாரியிடம் கையளிக்கப்பட்டது.
அத்துடன் குறித்த மகஜர், மேலதிக நடவடிக்கைக்காக மதுவரித் திணைக்கள ஆணையாளருக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளது.
யாழ்ப்பாணத்தில், சங்கானை , கோப்பாய் , தெல்லிப்பழை மற்றும் கரவெட்டி ஆகிய பிரதேச செயலக பிரிவுக்கு உட்பட்ட பகுதிகளில், ஒவ்வொரு பிரதேச செயலக பிரிவிலும் தலா ஒன்று என்ற அடிப்படையில் புதிதாக நான்கு மதுபான சாலைகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளன.
இந்நிலையில் தெல்லிப்பழை பிரதேச செயலக பிரிவுக்கு உட்பட்ட காங்கேசதுறை பகுதியில் கொடுக்கப்பட்ட மதுபான சாலைக்கான அனுமதியை இரத்து செய்ய கோரி தெல்லிப்பழை சந்தியில் கடந்த வியாழக்கிழமை போராட்டம் முன்னெடுக்கப்பட்டு, தெல்லிப்பழை பிரதேச செயலகத்திற்கு பேரணியாக சென்று பிரதேச செயலரிடம் மகஜர் கையளிக்கப்பட்டமையும் , வெள்ளிக்கிழமை சங்கானை பிரதேசத்திற்கு வழங்கப்பட்ட மதுபான சாலை அனுமதியினை இரத்து செய்யுமாறு , சங்கானை பேருந்து நிலையத்திற்கு முன்பாக போராட்டம் நடத்தப்பட்டு , சங்கானை பிரதேச செயலகத்திற்கு சென்று பிரதேச செயலரிடமும் மகஜர் கையளிக்கப்பட்ட நிலையில் , இன்றைய தினம் திங்கட்கிழமை கரவெட்டி பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட நெல்லியடி பகுதியில் மதுபான சாலை அமைப்பதற்கான அனுமதியினை இரத்து செய்ய கோரி போராட்டம் முன்னெடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.


