தமிழர் உரிமைகள் கண்காணிப்பகத்தின் ஏற்பாட்டில், சிரேஷ்ட சட்டத்தரணி கனகரத்தினம் சுகாஷ் அவர்கள் எழுதிய ‘தமிழன் கனவு’ என்ற புத்தகத்தின் அறிமுக விழா நேற்று ஞாயிற்றுக்கிழமை(20.09.2026) பிற்பகல் 3.00 மணியளவில் மட்டக்களப்பு Y.M.C.A மண்டபத்தில் சிறப்பாக நடைபெற்றது. இவ்விழாவிற்கு ஆசிரியர் திரு. தருமலிங்கம் சுரேஷ் தலைமை தாங்கினார்.
இந்நிகழ்வில் கிழக்கிலங்கை இந்துக்குருமார் ஒன்றியப் பொருளாளர் கணபதிப்பிள்ளை நீலாம்பரம் குருக்கள் மற்றும் இயேசு சபைத்துறவி யோசேப் மேரி சுவாமிகள் ஆகியோர் ஆசியுரைகளை வழங்கினர். மேலும், கிழக்கு பல்கலைக்கழக நுண்கலைத்துறை சிரேஷ்ட விரிவுரையாளர் திரு.குமாரசாமி ரவிச்சந்திரன் முதன்மை விருந்தினராகவும், நாடாளுமன்ற உறுப்பினர் திரு.கஜேந்திரகுமார் பொன்னம்பலம் சிறப்பு விருந்தினராகவும் கலந்துகொண்டனர்.
தொடர்ந்து இடம்பெற்ற உரைகளின் போது, சிரேஷ்ட சட்டத்தரணி திரு. F.X.S. விஜயகுமார் அறிமுக உரையை வழங்க, பேராதனைப் பல்கலைக்கழக அரசியல் விஞ்ஞானத்துறை விரிவுரையாளரும், சட்டத்தரணியுமான திரு.நவரத்தினம் சிவகுமார் விமர்சன உரையை ஆற்றினார். அதனைத் தொடர்ந்து முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் திரு. செல்வராஜா கஜேந்திரன் சிறப்புரையாற்றினார்.
சகோதர இனத்தின் பார்வையில் என்றும் கருப்பொருளில் சட்டத்தரணி திரு.பஹீர் மொஹைதீன் வஹாத் தனது கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டதுடன், வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கத்தின் உபதலைவியும் மட்டக்களப்பு மாவட்டத் தலைவியுமான திருமதி. அமலராஜ் அமலநாயகி ‘நீதி தேடுவோர் பார்வை’ எனும் தலைப்பிலும், கிழக்கு பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத் தலைவர் திரு. தியாகு முகிலன் ‘அடுத்த தலைமுறையின் பார்வை’ எனும் தலைப்பிலும் உரையாற்றினர்.
விழாவின் நிறைவாக, நூலாசிரியரும் சிரேஷ்ட சட்டத்தரணியுமான திரு. கனகரத்தினம் சுகாஷ் ஏற்புரையாற்றியதைத் தொடர்ந்து, ஆசிரியர் திரு.கணபதிப்பிள்ளை குககுமாரராஜா நன்றியுரை கூறினார். சாந்தீஸ்வரன் சருஸ்திகா மற்றும் செல்வராசு பிரணீத்தா ஆகியோரால் தொகுத்து வழங்கப்பட்ட இந்நிகழ்வில் பெருந்திரளான மக்கள் கலந்து சிறப்பித்ததுடன் முதன்மை விருந்தினர் கிழக்கு பல்கலைக்கழக நுண்கலைத்துறை சிரேஷ்ட விரிவுரையாளர் திரு.குமாரசாமி ரவிச்சந்திரன் அவர்களால் நூல் வெளியிட்டு வைக்கப்பட்டதுடன் சிறப்பு பிரதிகளும் வழங்கி வைக்கப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

What’s your Reaction?

