நீர்கொழும்பு சிறைச்சாலையில் இருந்து மட்டக்களப்பு சிறைச்சாலைக்கு மாற்றப்பட்ட போதைப்பொருள் வியாபாரியைப் பார்வையிடுவதற்காக, கொழும்பில் இருந்து மட்டக்களப்பிற்குச் சென்று உணவகம் ஒன்றில் தங்கியிருந்த இருவரை ஐஸ் மற்றும் ஹெரோயின் போதைப்பொருட்களுடன் நேற்று முன்தினம் (29.07.2026) இரவு கைது செய்துள்ளதாக மட்டக்களப்பு தலைமையகப் பொலிஸார் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்டவர்கள் தெமட்டகொட பகுதியைச் சேர்ந்த, சிறையிலுள்ள போதைப்பொருள் வியாபாரியின் சகோதரர் மற்றும் அவரது நண்பர் ஆவர்.
இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது:
கடந்த ஏப்ரல் 7-ஆம் திகதி 7.5 கிலோ கிராம் ஐஸ் போதைப்பொருளுடன் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது செய்யப்பட்ட போதைப்பொருள் வியாபாரி, நீர்கொழும்பு சிறைச்சாலையில் அடைக்கப்பட்டிருந்தார்.
இந்நிலையில், குறித்த சிறைச்சாலையில் அண்மையில் ஏற்பட்ட படுகொலைச் சம்பவத்தைத் தொடர்ந்து, அங்கிருந்து அந்தப் போதைப்பொருள் வியாபாரி உட்பட 60 கைதிகள் மட்டக்களப்பு சிறைச்சாலைக்கு மாற்றப்பட்டனர்.
இதனையடுத்து, சிறையிலுள்ள சகோதரனைப் பார்வையிடுவதற்காக அவரது தம்பியும் நண்பரும் கொழும்பில் இருந்து மட்டக்களப்பிற்குச் சென்று, கல்லடிப் பகுதியில் உள்ள உணவகம் ஒன்றில் தங்கியிருந்துள்ளனர்.
இந்நிலையில், மட்டக்களப்பு தலைமையகப் பொலிஸாருக்குக் கிடைத்த இரகசியத் தகவலையடுத்து, பொலிஸ் நிலைய போதைப்பொருள் ஒழிப்பு மற்றும் ஊழல் தடுப்புப் பிரிவுப் பொறுப்பதிகாரி தலைமையிலான பொலிஸ் குழுவினர், சம்பவத்தினமான புதன்கிழமை இரவு குறித்த உணவகத்தை முற்றுகையிட்டுச் சோதனை நடத்தினர்.
இதன்போது, அங்குள்ள அறையில் இருந்த தெமட்டகொட பிரதேசத்தைச் சேர்ந்த 26 மற்றும் 31 வயதுடைய இருவரை 100 மில்லிகிராம் ஹெரோயின் மற்றும் 500 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருட்களுடன் பொலிஸார் கைது செய்தனர்.
கைது செய்யப்பட்டவர்களில் போதைப்பொருள் வியாபாரியின் சகோதரன், ஏற்கனவே போதைப்பொருட்களுடன் கைது செய்யப்பட்டு ஒன்றரை ஆண்டுகள் சிறையிலிருந்த பின்னரே நீதிமன்றப் பிணையில் அண்மையில் வெளிவந்துள்ளார்.
What’s your Reaction?

