கிழக்கு மாகாணத்தின் வரலாற்றுச் சிறப்புமிக்க ஆன்மீகத் தலங்களில் ஒன்றான மட்டக்களப்பு மாவட்டம், போரதீவுப்பற்றுப் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட திருப்பழுகாமம் அருள்மிகு ஸ்ரீ திரௌபதியம்மன் ஆலயத்தின் வருடாந்த தீப்பள்ளயச் சடங்கு பெருவிழா வெகுவிமர்சையாக நடைபெற்று வருகின்றது.
மகாபாரதக் காவிய நாயகியும், அக்னியில் அவதரித்த பாஞ்சாலி தாயின் அருளாசி வேண்டி ஆண்டுதோறும் கோலாகலமாக நடத்தப்படும் இச்சடங்கு உற்சவம், கடந்த வெள்ளிக்கிழமை (24.07.2026) ஆம் திகதி இரவு திருக்கதவு திறத்தலுடன் ஆரம்பமானது.
இதன் தொடர்ச்சியாக, இன்று புதன்கிழமை (29.07.2026)காலை ஆலயத்தில் விசேட பூசைகள் இடம்பெற்று நிகழ்வுகள் ஆரம்பமாகின.
தொடர்ந்து, ஆலயத்திற்கு அருகாமையிலுள்ள வாள் மாற்றும் பீடத்தில் பூசைகள் இடம்பெற்று, தருமரினால் வீமரிற்கு வாள் மாற்றிக் கொடுக்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து பஞ்ச பாண்டவர்கள் வனவாசம் செல்லும் வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வு பக்திப்பரவசத்துடன் நடைபெற்றது.
இவ்விழாவின் முக்கிய ஆன்மீக நிகழ்வான ‘தீப்பள்ளயச் சடங்கு’ (தீமிதிப்பு) எதிர்வரும் வெள்ளிக்கிழமை (31.07.2026) ஆம் திகதி மாலை மிகவும் பக்தி பூர்வமாக நடைபெறவுள்ளது.
பாரதம் முடிக்க அவதரித்து, கண்ணனின் தங்கையாய் விளங்கி, தீயில் உதித்த பாஞ்சாலி அம்மனின் அருள்வேண்டி நடைபெறுகின்ற இச்சடங்கு நிகழ்வுகளில் கலந்துகொண்டு அம்மனின் திருவருளைப் பெறுமாறு ஆலய நிருவாக சபையினரும் கிராம பொதுமக்களும் பக்த அடியார்களுக்கும் ஆன்மீக அன்பர்களுக்கும் அழைப்பு விடுத்துள்ளனர்.

What’s your Reaction?

