நல்லையாதீன தலைமைப்பீடம் ஒரு வருட காலத்திற்கு மேலாக வெற்றிடமாக உள்ள நிலையில் அதனை உடனடியாக நிரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டுமென நல்லையாதீன கட்டிடக்குழுச் செயலாளர் நடராசா சச்சிதானந்தன் வலியுறுத்தியுள்ளார்.இதுதொடர்பாக ஊடகங்களுக்கு அவர் கருத்துத் தெரிவிக்கையில்;
நல்லை ஆதீன குரு முதல்வராக இருந்த ஸ்ரீலஸ்ரீ சோமசுந்தர தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் இறைபதமடைந்து ஒரு வருடத்திற்கு மேலாகிவிட்டது.இவ்வெற்றிடத்திற்கு இந்து சமய பேரவைத் தலைவர் திரு.சி.சக்திகிரீவன் தகுந்தவர் என்று சைவப்பிரமுகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் நல்லை ஆதீனத்திற்கு யார் பொறுப்பானவர்கள் என்பது மக்களுக்கு தெரியப்படுத்த வேண்டும். நல்லை ஆதீன தலைமைப்பீடம் வெற்றிடமாக இருப்பதைத் தவிர்க்க அனைவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.
இலண்டன் வாழ் சைவத்தமிழ் மக்களுடைய நிதி அனுசரணையுடன் நல்லை ஆதீனத்திற்கு புதிய கட்டடம் அமைக்கப்பட்டு 23.06.2013 அன்று திறந்து வைக்கப்பட்டது. இலண்டனில் உள்ள பல ஆலயங்கள் மற்றும் தனி நபர்கள் நிதி அனுசரணைகளை நல்லை ஆதீன கட்டடம் அமைக்க வழங்கியிருந்தனர்.
இந்நிலையில் கடந்த மாதம் லண்டன் வருகை தந்த நல்லை ஆதீன அறக்கட்டளைத் தலைவர் கலாநிதி ஆறு திருமுருகன் அவர்கள் லண்டனில் உள்ள நல்லை ஆதீன அறக்கட்டளை அங்கத்தவர்களுடன் ஒரு சந்திப்பினை ஏற்படுத்தி நல்லை ஆதீன தலைமை தொடர்பில் ஆலோசித்திருக்கலாம். ஆனால் அவர் அச் சந்தர்ப்பத்தை தவறவிட்டுவிட்டார்.
தமிழ்நாட்டில் உள்ள சைவ ஆதீனங்களில் ஆதீன முதல்வர் உயிருடன் இருக்கும் போதே இளைய பட்டத்தை நியமித்து விடுவார்கள். ஆதீன முதல்வர் இறைபதம் அடைந்தவுடன் இளைய பட்டம் ஆதீன குரு முதல்வராக நியமிக்கப்பட்டு பொறுப்புகளை ஏற்றுக்கொள்வது மரபு. இந்த மரபு நல்லை ஆதீனத்தினால் கடைபிடிக்கப்படவில்லை.
இலங்கையில் வாழும் சைவ அறிஞர்கள், அமைப்புகள் இவ்விடயத்தில் ஒத்துழைப்பு வழங்கி நல்லை ஆதீனத்திற்கு பொருத்தமான தலைமை விரைவில் நியமிக்கப்பட வேண்டும் என்றார்.
What’s your Reaction?

