மாவட்ட மற்றும் பிரதேச நிர்வாகத்தின் மூலம் மக்களிற்கு வினைத்திறனும் தரமுமான சேவைகளை வழங்குவதனை இலக்காகக் கொண்டு, 2026 ஆம் ஆண்டிற்கான முல்லைத்தீவு மாவட்டத்தின் இரண்டாவது சுற்றின் முதலாவது , இந்த ஆண்டிற்கான ஏழாவது பிரதேச செயலாளர் மாநாடு இன்றைய தினம் (24.07.2026) காலை 8.30 மணிக்கு மாந்தை கிழக்கு பிரதேச செயலகத்தில், முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர் திரு. அ. உமாமகேஸ்வரன் அவர்களின் தலைமையில் நடைபெற்றது.
இன்றைய தினம் மாந்தை கிழக்கு பிரதேச செயலகத்திற்கு வருகை தந்த மாவட்ட அரசாங்க அதிபர் தலைமையிலான குழுவினர், பிரதேச செயலகத்தின் அலுவலக முறைமை, பிரதேச செயலாளர் மாநாட்டின் பின்னரான மாற்றங்கள் தொடர்பில் பார்வையிட்டனர்.
குறித்த பிரதேச செயலாளர் மாநாட்டில் விசேடமாக தேசிய உற்பத்தித்திறன் போட்டிக்கு தயார்ப்படுத்தப்பட்ட விடயங்கள் நிலைபேறானதும் விரைவானதுமான மக்கள் சேவையினை வழங்குவதற்கான சிறந்த அலுவலக முறைகளின் முன்னேற்றம் தொடர்பில் மாந்தை கிழக்கு பிரதேச செயலாளர் அவர்களினால் தெளிவுபடுத்தப்பட்டது. இதே போன்று பாண்டியன்குளம் சமுர்த்தி வங்கியின் சிறந்த உற்பத்தித்திறன் அலுவலக முறைமை பேணப்படுவது தொடர்பிலும் சமுர்த்தி முகாமையாளர் அவர்களால் தெளிவுபடுத்தப்பட்டது.
அதன் பின்னர் கடந்த மாநாட்டில் கலந்துரையாடப்பட்ட பல்வேறு விடயங்களின் முன்னேற்ற நிலைகள் மற்றும், 2026 ஆம் ஆண்டிற்கான நிதி ஒதுக்கீடுகள், மாவட்டத்தின் அபிவிருத்தி வேலைத்திட்டங்கள், பிரதேச செயலகங்களினூடாக மேற்கொள்ளப்படவுள்ள திட்டங்கள் மற்றும் பொதுமக்கள் சேவைகள் தொடர்பில் விரிவாக கலந்துரையாடப்பட்டது.
தொடர்ந்து நடைபெற்ற மாநாட்டில், அரசாங்கத்தினால் முல்லைத்தீவு மாவட்டத்திற்கு ஒதுக்கப்பட்டுள்ள கிராமிய வீதி அபிவிருத்தி வேலைத்திட்டம், வீட்டுத்திட்டம் உட்பட பல்வேறு அபிவிருத்தித் திட்டங்கள் மற்றும் சமூக நலத்திட்டங்கள் தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டது.
மேலும், பிரதேச செயலகங்களின் நிர்வாக, நிதி மற்றும் திட்டமிடல் செயற்பாடுகள், அவற்றின் முன்னேற்றங்கள், சமூக நலச்சேவை நடவடிக்கைகள், அபிவிருத்தித் திட்டங்கள், 2026 வரவு-செலவுத் திட்டத்தில் முல்லைத்தீவு மாவட்டத்திற்கான நிதி ஒதுக்கீடுகள் மற்றும் அவற்றின் செயற்பாட்டு முன்னேற்றங்கள் தொடர்பிலும் ஆராயப்பட்டது.
அத்துடன், மாந்தைகிழக்கு பிரதேச செயலாளர் பிரிவில் இனங்காணப்பட்டுள்ள அடிப்படைப் பிரச்சினைகள் மற்றும் அவற்றிற்கான தீர்வு நடவடிக்கைகள் உட்பட பல்வேறு முக்கிய விடயங்கள் குறித்து விரிவான கலந்துரையாடல்கள் இடம்பெற்றன.
மேலும் அரசாங்கத்தினால் முன்னெடுக்கவுள்ள நேர்மையான அரச சேவைக்கான ” நேர்மைக் கலாசாரம்” – க்ளீன் ஸ்ரீலங்கா” தேசிய செயற்பாட்டை நடைமுறைப்படுத்தல் தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டது.
இன்றைய இந்த மாநாட்டினை மாந்தைகிழக்கு பிரதேச செயலாளர் செல்வி சர்மிலி அவர்கள் மாந்தைகிழக்கு பிரதேச செயலக அலுவலர்களது ஒத்துழைப்புடன் சிறப்பாக ஒழுங்கமைத்திருந்தார்.
இம் மாநாட்டில் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திருமதி எஸ். மஞ்சுளாதேவி (நிர்வாகம்), மாவட்ட பிரதம உள்ளகக் கணக்காய்வாளர் திரு.சற்குணேஸ்வரன், புதுக்குடியிருப்பு, துணுக்காய்,ஒட்டுசுட்டான் உள்ளிட்ட பிரதேச செயலகங்களின் பிரதேச செயலாளர்கள், உதவிப் பிரதேச செயலாளர்கள், உதவித் திட்டமிடல் பணிப்பாளர்கள், கணக்காளர்கள், மற்றும் ஏனைய உத்தியோகத்தர்கள் முதலானோர் கலந்துகொண்டனர்.

What’s your Reaction?

