சர்வதேச கூட்டுறவு ஆண்டு விழாவை கொண்டாடும் முகமாக கல்வி கூட்டுறவு சங்கத்தினால் தேசிய மட்டத்தில் நடாத்தப்பட்ட சித்திரப் போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களை பாராட்டி கௌரவிக்கும் நிகழ்வு மட்டக்களப்பு கல்வி கூட்டுறவு சங்கத்தின் நிர்வாக உறுப்பினர் ஜீவானந்தம், தலைமையில் அலுவலக கேட்போர் கூடத்தில் சனிக்கிழமை (13) நடைபெற்றது.
கூட்டுறவு, ஒற்றுமை, ஒத்துழைப்பு மற்றும் சமத்துவம் என்ற தொனிப்பொருள்களில், கல்வி கூட்டுறவு சங்கத்தின் அங்கத்தவர்கள், அங்கத்தவர்கள் அல்லாத கல்வி சேவையில் பணியாற்றுபவர்கள், அவர்களின் பாடசாலை செல்லும் பிள்ளைகள் மற்றும் ஏனைய பாடசாலை மாணவர்களின் அழகியல் மனப்பாங்கு படைப்பு திறன்கள் மற்றும் கலை திறன்களை விருத்தி செய்வதற்காக நடாத்தப்பட்ட தேசிய சித்திரப் போட்டியில் கனிஷ்ட பிரிவில் (தரம் 6 -9) பங்குபற்றி, கோட்டைக்கல்லாறு மகா வித்தியாலயத்தை சேர்ந்த மாணவன் ஜீவராசா கதுஷாத் மாவட்ட மட்டத்தில் முதலாம் இடத்தினை பெற்று பாடசாலைக்கு பெருமை சேர்த்துள்ளார்.
தரம் ஒன்பதில் கல்வி பயிலும் ஜீவராசா கதுசாத் 2025 ஆம் ஆண்டு புத்தசாசன சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சு நடாத்திய கலாசார மத்திய நிலையத்நிற்கிடையிலான “பிரதீபா” தேசிய சித்திர போட்டியில் மாகாண மட்டத்தில் முதலிடத்தையும், அதே ஆண்டில் சிக்னல் மற்றும் தெரண தொலைக்காட்சி இணைந்து நடாத்திய “ஆகாயத்தில் ஒரு பயணம்” “உலக சிறுவர் தின” சித்திர போட்டியில் தேசிய மட்டத்திலும், மற்றும் சர்வதேச மனித உரிமைகள் உலகளாவிய பணி அமைப்பினால் நடாத்தப்பட்ட “போதை ஒழிப்பு” சித்திர போட்டியில் தேசிய மட்டத்திலும் தெரிவு செய்யப்பட்டவரும் ஆவார்.
வெற்றி பெற்ற மாணவனை பாடசாலை அதிபர், பிரதி அதிபர்கள், ஆசிரியர்கள் மற்றும் பாடசாலை சமூகத்தினர் வாழ்த்தி, பாராட்டுக்களைத் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.
(மட்டக்களப்பு நிருபர்)

