நீண்டகாலமாக தடுப்புக்காவலில் வைக்கப்பட்டிருக்கும் அரசியல் கைதிகள் 10 பேரின் விடுதலை குறித்து ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவுடன் பேசுவதாக தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்திடம் ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கைக்கான வதிவிடப்பிரதிநிதி மார்க் அன்ட்ரூ பிரென்ஞ் வாக்குறுதியளித்துள்ளார்.
தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலத்துக்கும், ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கைக்கான வதிவிடப்பிரதிநிதி மார்க் அன்ட்ரூ பிரென்ஞ்சுக்கும் இடையிலான சந்திப்பு நேற்று (05) கொழும்பில் நடைபெற்றது.
இந்த அரசாங்கத்துக்கு பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மைப்பலம் கிடைக்கப்பெற்றிருக்கும் நிலையில், ஏற்கனவே நாட்டுமக்களுக்கு வழங்கிய வாக்குறுதிக்கு முரணாக நிறைவேற்றதிகார ஜனாதிபதி முறைமையை நீக்காமல் தொடர்வதையோ அல்லது பொருளாதார சுமையைக் குறைப்பதற்கு நடவடிக்கை எடுக்காமல் இருப்பதையோ அரசு நியாயப்படுத்தமுடியாது என கஜேந்திரகுமார் பொன்னம்பலம் ஐநா பிரதிநிதியிடம் எடுத்துக்கூறியுள்ளார்
அதேபோன்று இப்போது தமிழரசுக்கட்சி சார்பில் 8 உறுப்பினர்களும், ஜனநாயக தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு சார்பில் ஒரு உறுப்பினரும், தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி சார்பில் ஒரு உறுப்பினரும் என தமிழ்த்தேசிய அரசியல் கட்சிகளைப் பிரதிநிதித்துவப்படுத்தி பாராளுமன்றத்தில் அங்கம்வகிக்கும் 10 உறுப்பினர்களும் தமிழர்களின் இனப்பிரச்சினைக்கான தீர்வு விடயத்தில் ஒருமித்த நிலைப்பாட்டுடன் செயற்படவேண்டிய அவசியம் ஏற்பட்டிருப்பதாகவும் கஜேந்திரகுமார் தெரிவித்தார்.
இந நிலையிலேயே நீண்டகாலமாக தடுப்புக்காவலில் வைக்கப்பட்டிருக்கும் அரசியல் கைதிகள் 10 பேர் தொடர்பில் பேசப்பட்டபோது, அவர்களது விடுதலை குறித்து தானும் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவுடன் பேசுவதாக ஐ.நா வதிவிடப்பிரதிநிதி மார்க் அன்ட்ரூ பிரென்ஞ் கஜேந்திரகுமாரிடம் வாக்குறுதியளித்தார்.