விடுதலைக் காற்றின் திசையெங்கும்
உன் குரலின் ஈரம் படர்ந்திருக்கிறது…
நீ வெறும் பாடகன் அல்ல,
எங்கள் தேசத்தின் நரம்புகளில்
வேகத்தைச் செலுத்திய இசைப் போர்வீரன்!
மேதகுவின் அன்பைச் சுமந்த
உன் கணீர்க்குரல் ஒலிக்காத
பாசறைகள் ஏது?
களமுனையில் காயமுற்ற வீரனுக்கு
உன் பாடல்தானே மருந்தானது!
காலங்கள் கடந்து நின்றாலும் –
ஈழத்து மண்ணின் வலிகளையும்
மாவீரர் புகழையும்
காற்றின் கைகளில் ஏற்றி வைத்தாய்.
யுத்தம் ஓய்ந்தாலும் உன்
“தேனிசை” ஓயாது!
இயற்கையின் மடியில் நீ இன்று
இளைப்பாறப் போனாலும்,
விடுதலைப் பசி கொண்ட ஒவ்வொரு தமிழனின்
உணர்விலும் நீ தீயாய் எரிவாய்!
தலைவனின் பாசறைப் பாணனே…
தமிழினத்தின் அழியாத கீதமே…
உன் இசைப் பயணம் – எங்கள்
தேசத்தின் வரலாறு!
தேசத்தின் விடுதலைக்காய்
தீயாய் எரிந்த பெருங்குரலே…
உனக்கு எங்களின் புகழ் வணக்கம்!
What’s your Reaction?
