‘கிளீன் ஸ்ரீ லங்கா’ தேசிய திட்டத்தின் கீழ், மாற்றுத்திறனாளிகள் மற்றும் விசேட தேவையுடையோரின் முன்னுரிமையைக் கருத்திற்கொண்டு வடிவமைக்கப்பட்ட ‘தாழ் தள’ பேருந்து சேவை இன்று (21) மாகும்புர பகுதியில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சர் பிமல் ரத்நாயக்க தலைமையில் இந்த நிகழ்வு நடைபெற்றது. சக்கர நாற்காலிகளைப் பயன்படுத்துவோர், கண்பார்வை சவால்களைக் கொண்டோர் மற்றும் கர்ப்பிணித் தாய்மார்கள் மிகவும் இலகுவாக ஏறிச் செல்லக்கூடிய வகையில் விசேடமாக வடிவமைக்கப்பட்ட 10 பேருந்துகள் இன்று முதல் போக்குவரத்து சேவையில் இணைக்கப்பட்டுள்ளன.
இந்த ஒவ்வொரு பேருந்திலும் 30 ஆசனங்கள் உள்ளன. அத்துடன், சக்கர நாற்காலிகளில் வரும் பயணிகளுக்கெனத் தனியான இடவசதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன.
இந்த முன்னோடித் திட்டம் மாகும்புரவிலிருந்து கொழும்பு கோட்டை வரையிலும், மாகும்புரவிலிருந்து கடவத்தை வரையிலும் முன்னெடுக்கப்படவுள்ளது. இதன் மூலம் கொழும்பு தேசிய வைத்தியசாலை மற்றும் மஹரகம அபெக்ஷா வைத்தியசாலை உள்ளிட்ட முக்கிய சுகாதார மையங்கள் இந்த வழித்தடங்களால் உள்ளடக்கப்படுகின்றன.
நிகழ்வில் உரையாற்றிய அமைச்சர் பிமல் ரத்நாயக்க, இந்த பேருந்துகள் மாற்றுத்திறனாளிகளுக்கு முன்னுரிமை அளிப்பதோடு, ஏனைய பயணிகளுக்கும் வசதியான மற்றும் நம்பகமான சேவையை வழங்கும் எனத் தெரிவித்தார். இவ்வருட இறுதிக்குள் இவ்வாறான 122 பேருந்துகளை சேவையில் இணைக்கத் திட்டமிட்டுள்ளதாகவும், எதிர்காலத்தில் கண்டி, மட்டக்களப்பு, மாத்தறை மற்றும் யாழ்ப்பாணம் போன்ற பகுதிகளுக்கும் இச்சேவையை விரிவுபடுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் மேலும் குறிப்பிட்டார்.
What’s your Reaction?
