பெண்கள் அரசுத்துறை ஊழியர்களுக்கு வீட்டிலிருந்து பணியாற்ற அனுமதி வழங்கும் யோசனை குறித்து பரிசீலனை செய்யப்படுவதாக பெண்கள் விவகார அமைச்சு தெரிவித்துள்ளது.
எதிர்க்கட்சியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் முன்வைத்த பரிந்துரையின் அடிப்படையில், இது தொடர்பாக உரிய தரப்புகளுடன் கலந்துரையாடி நடவடிக்கை எடுக்கப்படும் என பெண்கள் விவகார அமைச்சின் பிரதி அமைச்சர் வைத்திய கலாநிதி நாமல் சுதர்ஷன தெரிவித்தார்.
இந்த யோசனை செயல்திறன் மிக்கதும், தற்போது மிகவும் அவசியமானதும், முன்னேற்றகரமானதுமாக இருப்பதாக அவர் குறிப்பிட்டார்.
தென்னாசிய நாடுகளுடன் ஒப்பிடுகையில் இலங்கையில் பெண்களின் பொருளாதார பங்களிப்பு குறைவாக உள்ளதாகவும், அதிகமான பெண்களை வேலைவாய்ப்பில் இணைப்பதற்கான தெளிவான திட்டம் நாட்டுக்கு தேவையெனவும் அவர் சுட்டிக்காட்டினார்.
பெண்கள் வீட்டிலிருந்தே பணியாற்ற அனுமதித்தால், தேசிய பொருளாதாரத்தில் அவர்களின் பங்களிப்பு அதிகரிக்கும் என இந்த யோசனையை முன்வைத்த கண்டி மாவட்டத்தைச் சேர்ந்த ஐக்கிய மக்கள் சக்தி நாடாளுமன்ற உறுப்பினரும் சட்டத்தரணியுமான சமிந்த்ராணி கிரெல்ல தெரிவித்துள்ளார்.
