வடக்கு மற்றும் கிழக்குப் யுத்த நடவடிக்கையின் போது, விடுதலைப் புலிகளின் முகாம்கள், மற்றும் விடுதலைப் புலிகளின் வங்கிகள் மற்றும் பிற கட்டிடங்களில் கண்டுபிடிக்கப்பட்ட பொருட்களில், தங்க நகைகளாக இருக்கக்கூடும் என சந்தேகிக்கப்படும் பொருட்கள் தற்போது இராணுவ புலனாய்வு சபையின் பொறுப்பில் உள்ளன.
இவைகளை தேசிய இரத்தினக்கல் மற்றும் ஆபரண அதிகாரசபைக்கு அனுப்பி, அவற்றின் இயல்பையும் மதிப்பையும் ஆய்வு செய்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்த உத்தரவு, குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் சார்பில் பிரதி சொலிசிட்டர் ஜெனரல் சுஹர்ஷி ஹேரத் முன்வைத்த கோரிக்கையை பரிசீலித்த பின்னர், கொழும்பு பிரதான நீதவான் தனுஜா லக்மாலி அவர்களால் வழங்கப்பட்டது.
அத்துடன் பிரதி சொலிசிட்டர் ஜெனரல் முன்வைத்த சமர்ப்பணங்களை அடிப்படையாகக் கொண்டு, இந்த விசாரணைகளுக்குத் தேவையான பிற உத்தரவுகளும் நீதவான் வழங்கியுள்ளார்.
