உலக கிரிக்கெட் அரங்கில் தொழில்முறை கிரிக்கெட்டில் அதி உயரியதும் கோடானகோடி ருபாவை பணப்பரிசாக அள்ளி வழங்குவதுமான ஐபிஎல் என சுருக்கமாக அழைக்கப்படும் இண்டியன் பிரீமியர் லீக் ரி20 கிரிக்கெட் தொடரின் 18ஆவது அத்தியாயம் சனிக்கிழமை (22) ஆரம்பமாகவுள்ளது
நடப்பு சம்பியன் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கும் சென்னை சுப்பர் கிங்ஸ் அணிக்கும் இடையிலான போட்டியுடன் ஆரம்பமாகவுள்ளது.
இன்டியன் பிரீமியர் லீக் கிரிக்கெட் போட்டிகள் பரபரப்பை ஏற்படுத்துவதுடன் ஆயிரக்கணக்கான இரசிகர்களையும் போட்டி நடைபெறும் அரங்குகளுக்கு சுண்டி இழுக்கிறது.
அதுமட்டுமல்லாமல் உலகம் முழுவதும் கோடிக்கணக்கான மக்கள் தொலைக்காட்சி வாயிலாகவும் இப் போட்டிகளை கண்டு இரசிக்கின்றனர்.
இப் போட்டியில் தலா 5 தடவைகள் சம்பியன்களான சென்னை சுப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இண்டியன்ஸ், 3 தடவைகள் சம்பியனான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் , அங்குரார்ப்பண அத்தியாயத்தில் சம்பியனான ராஜஸ்தான் றோயல்ஸ், முன்னாள் சம்பியன்களான சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் ஆகியவற்றுடன் டெல்ஹி கெப்பிட்டல்ஸ், லக்னோ சுப்பர் ஜயன்ட்ஸ், பஞ்சாப் கிங்ஸ், றோயல் செலஞ்சர்ஸ் பெங்களூரு ஆகிய பத்து அணிகள் பங்குபற்றுகின்றன.
இரண்டாவது அத்தியாயத்தில் (2009) சம்பியனான டெக்கான் சார்ஜர்ஸ் 2012க்குப் பின்னர் இயங்கவில்லை.
அவ்வணிக்கு பதிலாக சன்ரைசர்ஸ் ஹைதராபாத் இணைத்துக்கொள்ளப்பட்டது.
குஜராத் டைட்டன்ஸ், லக்னோ சுப்பர் ஜயன்ட்ஸ் ஆகியன 2022இலிருந்து விளையாடி வருகின்றன.
இந்தப் பத்து அணிகளும் இரண்டு குழுக்களாக வகுக்கப்பட்டுள்ளன.
ஏ குழுவில் 1. சென்னை சுப்பர் கிங்ஸ், 2. கொல்கத்தா நைட் ரைடர்ஸ், 3. ராஜஸ்தான் றோயல்ஸ், 4. றோயல் செலஞ்சர்ஸ் பெங்களூரு, 5. பஞ்சாப் கிங்ஸ் ஆகியனவும்
பி குழுவில் 1. மும்பை இன்டியன்ஸ், 2. சன்ரைசர்ஸ் ஹைதராபாத், 3. குஜராத் டைட்டன்ஸ், 4. டெல்ஹி கெப்பிட்டல்ஸ், 5. லக்னோ சுப்பர் ஜயன்ட்ஸ் ஆகியனவும் இடம்பெறுகின்றன.
ஒவ்வொரு அணியும் தத்தமது குழுக்களில் இடம்பெறும் அணிகளுடனும் தத்தமது ஒத்த வரிசைகளில் பி குழுவில் இடம்பெறும் அணிகளுடனும் தலா இரண்டு தடவைகளும் ஏனைய அணிகளுடன் தலா ஒரு தடவையும் மோதும்.
இதன்படி ஒவ்வொரு அணியும் 14 போட்டிகளில் விளையாடும். இதற்கு அமைய லீக் சுற்றில் மொத்தம் 70 போட்டிகள் நடத்தப்படும்.
லீக் சுற்று முடிவில் இரண்டு குழுக்களிலும் ஒட்டுமொத்த நிலையில் முதல் இரண்டு இடங்களைப் பெறும் அணிகள் முதலாவது தகுதிகாண் சுற்றில் விளையாடும்.
இரண்டாம், மூன்றாம் இடங்களைப் பெறும் அணிகள் நீக்கல் போட்டியில் விளையாடும்.
முதலாவது தகுதிகாணில் தோல்வி அடையும் அணியும் நீக்கல் போட்டியில் வெற்றிபெறும் அணியும் இரண்டாவது தகுதிகாணில் விளையாடத் தகுதிபெறும்.
இரண்டு தகுதிகாண் போட்டிகளிலும் வெற்றிபெறும் அணிகள் சம்பியன் அணியைத் தீர்மானிக்கும் இறுதிப் போட்டியில் மே மாதம் 25ஆம் திகதி ஒன்றையொன்று எதிர்த்தாடும்.
இன்டியன் பிரீமியர் லீக் கிரிக்கெட் போட்டியில் பிரபல்யமான சர்வதேச வீரர்களும் இந்திய தேசிய மற்றும் உள்சூர் வீரர்களும் இடம்பெறுவதால் ஒவ்வொரு போட்டியும் ஒன்றுக்கொன்று விறுவிப்பை ஏற்படுத்தக்கூடியனவாக அமைகின்றது.

