சமூக ஊடகங்களில் நடைபெறும் மோசடிகள் மற்றும் இணைய வழி நிதி ஏமாற்றங்கள் தொடர்பில் கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குற்ற விசாரணைப் பிரிவின் தலைமையகத்தில் புதிதாக நிறுவப்பட்டுள்ள இணைய குற்றங்கள் தடுப்பு பிரிவு மேற்கொண்ட விசாரணைகளின் அடிப்படையில், இணையவழி மோசடிகளில் ஈடுபடுவோருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக பொலி; தினைககளம் அறிவித்துள்ளது.
இது தொடர்பாக கருத்து தெரிவித்த பொலிஸ் ஊடகப் பேச்சாளர், சட்டத்தரணி எப்.யூ. வூட்லர், பொதுமக்கள் அதிக விழிப்புடன் இருக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
தனிப்பட்ட தகவல்கள் அல்லது நிதி விவரங்களை யாரிடமும் பகிர வேண்டாம் என்றும், நல்லவர் போல நடிப்பவர்களை நம்ப வேண்டாம் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.
மேலும், இணைய குற்றங்கள் தடுப்பு பிரிவு சமூக ஊடகங்கள் வழியாக நடைபெறும் மோசடிகள், சட்டவிரோத செயல்பாடுகளை கையாள முழுமையாக தயாராக இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.
இவ்வகை குற்றங்களில் குற்றம் நிரூபிக்கப்படுவோருக்கு எதிராக கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.
சமூக ஊடகங்கள் மற்றும் இணைய தளங்கள் மூலமாக நடைபெறும் மோசடி சம்பவங்கள் சமீப காலமாக அதிகரித்து வரும் நிலையில், விசாரணைகளை வலுப்படுத்தவும் பொதுமக்களை எச்சரிக்கவும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
