கட்டுநாயக்க விமான நிலையத்தில் இன்று அதிகாலை மேற்கொள்ளப்பட்ட விசேட சோதனைகளின் போது, சுமார் 13 கோடி ரூபாவிற்கும் அதிக பெறுமதியுடைய போதைப்பொருட்களுடன் மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஓமானின் மஸ்கட் நகரிலிருந்து இன்று அதிகாலை 4.00 மணியளவில் சலாம் எயார் விமான சேவைக்கு சொந்தமான விமானம் மூலம் வந்திறங்கிய பயணிகளையே விமான நிலைய சுங்கப் பிரிவினர் கைது செய்துள்ளனர்.
சந்தேகநபர்கள் கொண்டு வந்த ஐந்து பயணப் பொதிகளைச் சோதனையிட்ட போது, அவற்றுள் மறைத்து வைக்கப்பட்டிருந்த 10 கிலோகிராம் 394 கிராம் ‘குஷ்’ மற்றும் ஒரு கிலோகிராம் 912 கிராம் ‘ஹஷிஷ்’ ஆகிய போதைப்பொருட்கள் மீட்கப்பட்டுள்ளன.
கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களின் மொத்த சந்தைப் பெறுமதி 13 கோடியே 39 இலட்சத்து 40 ஆயிரம் ரூபா என மதிப்பிடப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்டவர்களில் இருவர் நாத்தாண்டியா பகுதியைச் சேர்ந்த 29 வயதுடைய வர்த்தகர் மற்றும் கட்டிடத் தொழிலாளி என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
மற்றைய நபர் கிராண்ட்பாஸ் பகுதியைச் சேர்ந்த 32 வயதுடைய வர்த்தகர் எனத் தெரியவந்துள்ளது.
சந்தேகநபர்களும் மீட்கப்பட்ட போதைப்பொருட்களும் மேலதிக விசாரணைகளுக்காக பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
இதேவேளை, இன்று அதிகாலை ஓமானில் இருந்து வருகை தந்த 37 வயதுடைய மற்றுமொரு பயணியிடமிருந்து 8 கோடி ரூபா பெறுமதியான ‘குஷ்’ ரக போதைப்பொருட்களும் சுங்க அதிகாரிகளால் கைப்பற்றப்பட்டுள்ளன.
குறித்த நபர் இரவு விடுதி ஒன்றில் பாதுகாப்பு உத்தியோகத்தராகப் பணிபுரிபவர் என ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
அதற்கமைய, இன்று ஒரே நாளில் கட்டுநாயக்க விமான நிலையத்தில் சுமார் 21 கோடி ரூபா பெறுமதியான போதைப்பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
