உள்ளூர் செய்திகள் முக்கிய செய்திகள்

விகாரைக்குரிய மண் விகாரைக்கே மக்களின் மண் மக்களுக்கே’ – தையிட்டி விவகாரத்தில் அருள் ஜெயந்திரன் குரல்

தையிட்டி விகாரையை விகாரைக்குரிய காணியிலேயே கட்டித் தருவதற்கு தாம் தயார் எனவும், ஆனால் சட்டமுரணாக கையகப்படுத்தப்பட்டுள்ள மக்களின் பூர்வீக காணிகளை உரிய மக்களிடம் மீள வழங்க வேண்டும் எனவும் அகில இலங்கை மக்கள் எழுச்சிக் கட்சியின் செயலாளர் நாயகம் அருள் ஜெயந்திரன் வலியுறுத்தியுள்ளார்.

யாழ்ப்பாணத்தில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்தார்.

தையிட்டி விகாரையை எதிர்ப்பது தமது நிலைப்பாடு அல்ல என்றும், விகாரை அமைக்கப்பட்ட முறை மற்றும் காணி உரிமை தொடர்பான அநியாயத்திற்கே மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருவதாகவும் அவர் கூறினார்.

தையிட்டி, திஸ்ஸ விகாரை விவகாரம் என்பது மத நம்பிக்கையைச் சார்ந்த ஒன்றல்ல அது நில உரிமை, சட்டம் மற்றும் நீதி சார்ந்த பிரச்சினை என அருள் ஜெயந்திரன் சுட்டிக்காட்டினார்.

கடந்த காலங்களில் வட பகுதியில் பல இடங்களில், தொல்பொருள் அல்லது பாதுகாப்பு காரணங்களை முன்வைத்து, மக்களின் காணிகள் கையகப்படுத்தப்பட்டதாகவும், அதுவே இன்றைய பதற்றங்களுக்கு காரணமாக உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

மேலும், திஸ்ஸ விகாரை, செம்மணி விவகாரம், பயங்கரவாத தடைச்சட்டம் உள்ளிட்ட பிரச்சினைகளுக்கு விரைவான தீர்வுகளை வழங்குவதாக தற்போதைய அரசு ஆட்சிக்கு வருமுன் வாக்குறுதி அளித்ததாகவும், ஆனால் இன்று அவை அனைத்தும் மறைந்துவிட்டதாகவும் அவர் குற்றஞ்சாட்டினார்.

நாட்டில் தற்போது எந்தவித பயங்கரவாத அச்சுறுத்தலும் இல்லை என கூறிய அவர், இவவாறான நிலையில் பயங்கரவாத தடைச்சட்டம் தொடர்வது தேவையற்றது எனவும், அதற்கு மாற்றாக புதிய சட்டம் கொண்டுவர வேண்டிய அவசியம் என்ன எனவும் கேள்வி எழுப்பினார்.

மேலும், ஜனாதிபதி வடக்கு பகுதிகளில், குறிப்பாக யாழ்ப்பாணத்தில், பாதுகாப்பின்றி அச்சமின்றி நடந்து செல்ல முடிகிற நிலையில், பயங்கரவாத தடைச்சட்டம் இன்னமும் நடைமுறையில் இருப்பது எதற்கெனவும் அருள் ஜெயந்திரன் வினவினார்.

தையிட்டி திஸ்ஸ விகாரை போன்ற விவகாரங்களுக்கு அரசியல் நோக்கமற்ற, சட்டபூர்வமான, நியாயமான தீர்வுகள் வழங்கப்பட வேண்டும் என்பதே தமது கட்சியின் நிலைப்பாடு என அவர் வலியுறுத்தினார்.

You may also like

செய்திகள் வணிகம்

IMF உயர்மட்டக் குழு, ஜனாதிபதி அநுரவை சந்திப்பு

இலங்கைக்கு வருகை தந்துள்ள சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) உயர்மட்டக்
செய்திகள்

தமிழரசுக்கட்சியை கைப்பற்றினார் எம்.ஏ.சுமந்திரன் – மாவை சேனாதிராஜா – சட்டத்தரணி தவராசா திருமதி ரவிராஜ் விலகல்

எதிர்வரும் பொதுத்தேர்தலில் தமிழரசுக்கட்சி சார்பில் யாழ் தேர்தல் மாவட்டத்தில் போட்டியிடவிருக்கும்