வங்காள விரிகுடாவில் உருவாகியுள்ள வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, வடமாகாணம் உள்ளிட்ட நாட்டின் பல பகுதிகளில் நாளை முதல் கனமழை பெய்யக்கூடும் என யாழ். பல்கலைக்கழக புவியியல் துறை பேராசிரியர் நாகமுத்து பிரதீபராஜா எச்சரிக்கை விடுத்துள்ளார்.
நாளை வியாழக்கிழமை முதல் எதிர்வரும் 27-ஆம் திகதி வரை வடக்கு, கிழக்கு, ஊவா மற்றும் மத்திய மாகாணங்கள் உட்பட நாட்டின் பல பகுதிகளில் பரவலாக மிதமானது முதல் கனமானது வரையிலான மழை பெய்ய வாய்ப்புள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக, தற்போது நிலவி வரும் கடும் குளிருடன் கூடிய வானிலை தற்காலிகமாக மாறி, வெப்பநிலையும் சற்று உயர்வடையக்கூடும்.
இந்தத் திடீர் வானிலை மாற்றம் காரணமாக, குறிப்பாக நெல் அறுவடையில் ஈடுபட்டுள்ள விவசாயிகளும், அறுவடை செய்த நெல்லை உலர விடும் விவசாயிகளும் மழையினால் ஏற்படும் பாதிப்புகளைத் தவிர்க்கும் வகையில் முன்னெச்சரிக்கையுடன் செயற்படுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
27-ஆம் திகதிக்குப் பிறகு மழையின் தாக்கம் குறைந்தாலும், மீண்டும் 29-ஆம் திகதி முதல் சில பகுதிகளில் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் அந்த வானிலை அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
What’s your Reaction?
