மன்னார் மற்றும் யாழ்ப்பாணத்தில் நடைபெறும் பல்வேறு அரச மற்றும் மக்கள் நிகழ்வுகளில் பங்கேற்பதற்காக ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க இன்று (15) மற்றும் நாளை (16) வடக்கிற்கு அதிகாரபூர்வ விஜயம் மேற்கொள்கிறார்.
இன்று பிற்பகல் 2 மணிக்கு யாழ்ப்பாணம், வேலணை ஐயனார் கோவில் விளையாட்டு மைதானத்தில் நடைபெறும் வட மாகாண தைப்பொங்கல் விழாவில் ஜனாதிபதி பங்கேற்க உள்ளார்.
அதனைத் தொடர்ந்து, சுற்றுலாத் துறையை ஊக்குவிக்கும் நோக்கில் யாழ்ப்பாண சுற்றுலா சபையால் மானிப்பாய் மருதடி விநாயகர் கோவிலில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள தைப்பொங்கல் விழாவிலும் அவர் கலந்து கொள்ளவுள்ளார்.
‘தமக்கென இடம் – அழகான வாழ்க்கை’ என்ற தொனிப்பொருளின் கீழ், நாடு முழுவதும் 31 ஆயிரத்துக்கும் அதிகமான புதிய வீடுகளை நிர்மாணிக்கும் தேசிய வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படுகிறது.
அதன் ஒரு பகுதியாக, யுத்தத்தால் பாதிக்கப்பட்டு இன்னும் வீடுகளின்றி வாழும் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் 2,500 குடும்பங்களுக்கான வீட்டு நிர்மாண திட்டத்தின் ஆரம்ப நிகழ்வு, நாளை முற்பகல் 9 மணிக்கு யாழ்ப்பாணம், சாவகச்சேரி வீரசிங்கம் ஆரம்பப் பாடசாலை மைதானத்தில் ஜனாதிபதி தலைமையில் நடைபெற உள்ளது.
மேலும், போதைப்பொருள் அச்சுறுத்தலை ஒழிப்பதற்கான ‘முழு நாடுமே ஒன்றாக’ தேசிய செயற்பாட்டின் வட மாகாண நிகழ்ச்சி, நாளை பிற்பகல் யாழ்ப்பாணம் தொழில்நுட்பக் கல்லூரி விளையாட்டு மைதானத்தில் ஜனாதிபதியின் தலைமையில் நடைபெறவுள்ளது.
